திருமணமான ஒரு வருடத்திலேயே திருமணத்தை கலைத்து, கணவரிடமிருந்து ரூ.5 கோடி ஜீவனாம்சம் கேட்ட பெண்ணை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

Advertisment

தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரியும் நபர் ஒருவருக்கு, 1 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை கலைத்து கணவரிடம் இருந்து ரூ.5 கோடி ஜீவனாம்சம் பெற்று தர வேண்டும் என்று அந்த நபரி்ன் மனைவி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது கணவன் மனைவி இடையே பலமுறை மத்தியஸ்த முயற்சிகள் நடந்தது. ஆனால், அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால் இறுதியாக ரூ.35 முதல் ரூ.40 லட்சம் வரை வழங்க கணவர் முன்வந்துள்ளார். இருப்பினும் மனைவி அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ரூ.5 கோடி ஜீவனாம்சம் கேட்ட மனைவியை கண்டித்ததோடு மட்டுமல்லாமல் இரு தரப்பினருக்கும் மீண்டும் மத்தியஸ்தம் செய்ய அறிவுறுத்தினார். இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா தெரிவிக்கையில், ‘திருமணம் ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை. அதற்குள் மனைவி அதிக அளவிலான ஜீவனாம்சம் கேட்கிறார். அந்த பெண்ணை திரும்ப அழைப்பதன் மூலம் நீங்கள் தவறு செய்வீர்கள். அவரை உங்களால் வைத்திருக்க முடியாது. கனவுகள் மிகப் பெரியவை. ரூ.5 கோடி கோரிக்கை நியாயமற்றது. இத்தகைய கோரிக்கைகள் தொடர்ந்தால் மிகக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படும்.

தீர்வுக்காக இரு தரப்பினரும் உச்ச நீதிமன்ற மத்தியஸ்த மையத்திற்குத் திரும்புமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். திருமணத்தை கலைப்பதற்காக மனைவி 5 கோடி ரூபாய் கேட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான திருமண வாழ்க்கை சுமார் ஒரு வருடம் மட்டுமே. மனைவியின் நிலைப்பாடு அப்படி இருக்கப் போகிறது என்றால், அவருக்குப் பிடிக்காத சில உத்தரவுகளை நாங்கள் பிறப்பிக்க வேண்டியிருக்கும். சரியா? மனைவி நியாயமான கோரிக்கையை முன்வைத்து இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தீர்வு காண மனைவி மிகவும் நியாயமான அணுகுமுறையை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.

Advertisment

அக்டோபர் 5 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு உச்ச நீதிமன்ற மத்தியஸ்த மையத்தில் ஆஜராகுமாறு இரு தரப்பினரையும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி இரு தரப்பினரும் ஆஜராகி மத்தியஸ்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு இந்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.