பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது இந்த திருத்தத்தின்படி, 2003ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத அனைவரும் தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்க வேண்டும் எனவும், இவர்களில் 1981 ஜூலை 1க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களுடைய பெற்றோரின் பிறப்பிடம் சார்ந்த சான்றுகளை வழங்க வேண்டும் என்றும் இந்த சான்றிதழ்கள் இல்லாதோர் வாக்களிக்க தகுதியில்லாதவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு இந்தியா கூட்டணி அடங்கிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், இதற்கிடையில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் முதல் கட்டமாக மொத்தம் 65.2 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட வாக்காளர்களில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாகவும், 35 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டதாகவும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 1.2 லட்சம் பேர் இன்னும் தங்கள் படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களை அளித்திருந்தன. அந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி இந்த வழக்கு இன்று (15.09.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில் சட்ட விரோத நடைமுறை கண்டறிக்கப்பட்டால் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் நடவடிக்கை முழுமையாக ரத்து செய்யப்படும். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு நாடு முழுவதற்கும் பொருந்தும்” எனத் தெரிவித்தனர். முன்னதாக, “தான் வகுத்துள்ள விதிகளை தேர்தல் ஆணையமே பின்பற்றவில்லை” என்று குற்றச்சாட்டை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.