பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்தாண்டு ஜூலை 5ம் தேதி தனது வீட்டிற்கு அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து.. முதல் குற்றவாளியான வடசென்னையின் பிரபல தாதா ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, பல்​வேறு அரசி​யல் கட்​சிகளைச் சேர்ந்தவர்​கள், 10 வழக்​கறிஞர்​கள் உள்ளிட்ட 27 பேரை கைது செய்தனர். அதில், ரவுடி திரு​வேங்​கடம் போலீ​சா​ரால் என்​க​வுண்​டர் செய்​யப்​பட்​ட நிலையில், சம்போ செந்​தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால், அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

இந்த வழக்​கில், குற்​றம் சாட்​டப்​பட்ட நபர்​கள் மீது செம்​பி​யம் போலீ​சார் 5000 பக்​கங்​கள் கொண்ட குற்​றப்​பத்திரி​கையை எழும்​பூர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​தனர். இந்த வழக்கு விசா​ரணை சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்து வந்தது. இதனிடையே, இந்த வழக்கை போலீ​சார் முறை​யாக விசா​ரிக்​கவில்லை எனக்​கூறி ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரர் கீனோஸ் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்திருந்​தார். அப்போது, வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

Advertisment

இந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன்படி, இன்று (19-11-25) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், சிபிஐ விசாரணை தான் வேண்டும் என்று அனைத்து வழக்குகளிலும் சேர்க்கக்கூடாது. விரிவான விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்றியது சரியில்லை என்று வாதிட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிபிஐ விசாரணைக்கு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து ஆணையிட்டனர். இது தொடர்பாக உச்ச நீதிபதிகள் கூறியதாவது, ‘சில நேரங்களில் விரிவான ஆய்வு செய்த பின்பு தான் சில முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். அந்த வகையில் இந்த நீதிமன்றம் தற்போது விரிவான ஆய்வு செய்த பின்பு இந்த இடைக்கால தடையை விதிக்கிறோம்’ என்று தெரிவித்தனர். 

Advertisment