முன் ஜாமீன் கேட்டு ஜெகன்மூர்த்தி மனு; உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

jagansuprems

Supreme Court grants anticipatory bail to Jaganmoorthy Child abduction case

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் காதல் திருமணம் விவகாரத்தில் சிறுவனை கடத்திச் சென்று தாக்கிய விவகாரமானது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக இந்த சிறுவனை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் காரில் கடத்தி செல்லப்பட்டு மிரட்டப்பட்டார் எனத் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம்,ஏடிஜி.பி. ஜெயராமை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி ஆள் கடத்தலுக்கு அரசு வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் ஏ.டி.ஜி.பி.ஜெயராமை காவல் சீருடையிலேயே போலீசார் கைது செய்தனர். பூவை ஜெகன்மூர்த்தியிடமும், ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடமும் தொடர்ந்து துருவி துருவி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதே சமயம் குற்ற வழக்கில் கைது செய்யப்படும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தன்னை கைது செய்ய பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கு சிபிஐ போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணையை சிபிசிஐடி தொடங்கியுள்ளது. திருவாலங்காடு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் எஃப் ஐ ஆர் அடிப்படையில் கடத்தல், வீட்டில் அத்துமீறி நுழைதல், பணத்திற்காக ஆட்கடத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குபதிவு செய்துள்ளது.

இதற்கிடையில், தன் மீது பதியப்பட்ட எப்.ஐ.ஆர். ரத்து செய்யக் கோரி பூவை ஜெகன் மூர்த்தி சார்பாக உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஆதாரங்கள் இல்லாமல் தன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் தன்னுடைய பெயரை இழிவுபடுத்தும் விதமாகவும் களங்கப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் இந்த மனுக்கள் நீதிபதிகள் மனோஜ் மிஷ்ரா மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (30-06-25) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பூவை ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், அவரை கைது செய்ய காவல்துறைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

 

 

Anticipatory bail Poovai Jaganmoorthy Supreme Court
இதையும் படியுங்கள்
Subscribe