தமிழ்நாடு முழுவதும் தி.மு.க சார்பில் ‘ஒரணியில் தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சியின் சார்பில் ஏழைகளின் குறைகளை கேட்பதும் தமிழக அரசின் திட்டங்கள் ஏழைகளை சேர்ந்திருக்கிறதா என்பதை கேட்டு அறிந்து புதிய உறுப்பினர்களை தி.மு.கவில் சேர்க்கும் நிகழ்வினை தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என அனைவரும் வீடு வீடாகச் சென்று ‘ஒரணியில் தமிழ்நாடு’ என்பதன் விளக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து உறுப்பினர்களைச் சேர்த்து வருகின்றனர்.

இதனிடையே, பொதுமக்களிடம் திமுகவினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் சட்டவிரோதமாக ஆதார் விவரங்களை சேகரித்து வருகின்றனர் என்றும் இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்றும், இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமைச் செயல் அதிகாரி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘ஆதார் தொடர்பான விவரங்களை சேகரிக்கும் அந்த பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அந்த விவரங்களை விற்பனை செய்தால் என்ன செய்வது?. இந்திய மக்கள் இவ்வாறு தான் நடத்தப்படுகிறார்களா?. கட்சியின் உறுப்பினர் விவரங்களை சேகரித்ததில் தவறில்லை. ஆனால், அந்த விவரங்கள் எவ்வாறு கையாளப்படும்? எவ்வாறு பாதுகாக்கப்படும்? எவ்வாறு அழிக்கப்படும்? என்பது தொடர்பான எந்த திட்டமும் விவரங்களும் இல்லை. மக்களின் தரவுகளை பாதுகாப்பது தொடர்பான தகவல் தொழில்நுட்ப விதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. இது மிகவும் ஆபத்தானது. எனவே ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையின் போது மக்களிடம் ஓடிபியை பெறக் கூடாது’ என்று கூறி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில், மதுரை நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நீக்கக் கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனு நீதிபதி நரசிம்மா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக வழக்கறிஞர் வில்சன், உறுப்பினர் சேர்க்கையின் போது ஓடிபி கேட்பது உறுதிப்படுத்துதலுக்காக மட்டுமே என வாதிட்டார். இதனை கேட்ட நீதிபதிகள், ‘ஓடிபி தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை. எனவே இடைக்கால தடையை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தையே அணுகவும்’ என்று அனுமதி அளித்த அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.