Supreme Court confirms murder case against Cuddalore District Police Inspector Photograph: (police)
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடந்த 2015 ஆம் ஆண்டு மும்தாஜ் என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த நெய்வேலி காவல்துறையினர் மேல்பட்டாம்பாக்கம் அருகே பி.என் பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற பட்டியல் சமூக கூலி தொழிலாளியை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது காவல்துறையினர் அவரின் கை மற்றும் கால்களின் நகங்களை பிடுங்கிய நிலையில் மிகவும் கவலைக்கிடமான முறையில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் சிகிச்சை அளித்த மருத்துவரிடம் காவல்துறையினர் செய்ததை வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையிலே சிகிச்சைப் பலனின்றி சுப்பிரமணியன் உயிரிழந்தார். இதை இயற்கை மரணமாக மாற்றுவதற்கு முயன்றதையெடுத்து இதுகுறித்து அவரது மனைவி ரேவதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட காவல்துறை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது. அதன் பிறகு நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் 174 சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவர்களின் விசாரணையில் அப்போது நெய்வேலி காவல் ஆய்வாளராக இருந்த ராஜா என்கிற ராஜராஜன் இவருடன் உதவி ஆய்வாளராக இருந்த செந்தில்வேல் மற்றும் காவலர் சௌமியன் உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தி சிபிசிஐடி காவல்துறையினர் கொலை அல்லாத மரணம் என்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை மற்றும் எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் கடலூர் மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி கடந்த 2022 ஆம் ஆண்டு ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட மூன்று காவல்துறையினர் மீது கொலை வழக்கு மற்றும் எஸ்.சி எஸ்.டி பிரிவுகளை சேர்த்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டது.
அப்போது அதிமுக ஆட்சி காலத்தில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருந்த ஆய்வாளர் ராஜா, திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் மீண்டும் கடலூர் மாவட்ட வடலூர் காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக அமர்த்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவர் ரேவதி மற்றும் அவரது குழந்தைகளை மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொலை குற்றவாளியான ராஜாவை மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டியும் வழக்கில் இருந்து விடுவிக்க கோரியும் மனு தாக்கல் செய்தனர். அப்போது 302 (கொலை) பிரிவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி உச்சநீதிமன்றம் சென்று தடையாணை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 302 போட்டது சரியென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும். இந்த வழக்கினை விரைந்து நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் சுரேஷ், பிரசன்னா, திருமூர்த்தி ஆஜராகியுள்ளனர். ரேவதி தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லிக்குப்பம் பகுதிக்குழு உறுப்பினராகவும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கடலூர் மாவட்ட பொருளாளராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us