தெருநாய்கள் துரத்துவதால் வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும், ரேபிஸ் நோயால் அதிகரிக்கும் உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்தும் வரும் நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தியது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்து தெருநாய்களைப் பிடித்து கருத்தடை செய்து நிரந்தரமாக காப்பகங்களுக்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதில் எந்தவித சமரசமும் காட்டாமல் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும், இந்த நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்றும் உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, சர்ச்சையை கிளப்பியது மட்டுமல்லாமல் விலங்கு நல ஆர்வலர்களிடம் கோபத்தை தூண்டியது. இந்த உத்தரவிற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும், இந்த உத்தரவை எதிர்த்து போராட டெல்லியில் உள்ள இந்தியா கேட் வந்த பல விலங்கு உரிமை ஆர்வலர்களை அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகக் கூறி அவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தெருநாய்களை காப்பகத்திற்கு அனுப்பும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அனைத்து தெருநாய்களையும் பிடித்து காப்பகத்திற்கு அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று (22-08-25) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீதிபதிகள், ‘ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட அந்த உத்தரவில் சில மாற்றங்கள் மட்டும் நாங்கள் செய்கிறோம். பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு உரிய தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்த பிறகு அந்த நாய்கள் எங்கு பிடிக்கப்படுகிறதோ அந்த பகுதியிலேயே விட்டுவிட வேண்டும். அதே போல், ரேபிஸ் நோய் பரப்பக்கூடியதாக கருதப்படும் நாய்களை பாதுகாப்பான காப்பகங்களில் உரிய முறையில்அடைத்து வைக்க வேண்டும். தெருவோர நாய்களுக்கு உணவளிக்கக் கூடியவர்கள், அதற்கென ஒதுக்கப்பட்ட சில இடங்களில் மட்டுமே உணவுகளை அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்து உத்தரவிட்டனர்.