தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட தேர்தல் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு (ஓபிசி) உரிமை வழங்கும் விதமாக 42% இட ஒதுக்கீடு மசோதாவை தெலுங்கானா மாநில அரசு கொண்டு வந்தது. இந்த இட ஒதுக்கீடு மசோதா மாநில ஆளுநருக்கு அனுப்பப்பட்டு மாநில அரசால் அரசாணை வெளியிடப்பட்டது.
ரேவந்த் ரெட்டி அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநில அரசின் இட ஒதுக்கீடு அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தெலுங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வு முன்பு கடந்த 9ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘இந்திய அரசியல் சட்டத்தின்படி, இட ஒதுக்கீடு அளவு 50%யை தாண்டக்கூடாது என்று இருக்கும் நிலையில், தெலுங்கானா அரசு கொண்டு வந்த புதிய இடஒதுக்கீட்டால், பட்டியல், பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட உள்ளிட்ட அனைத்து பிரிவினர்களின் இட ஒதுக்கீடுகள் மொத்தம் 67% ஆகிறது. எனவே ஏற்கெனவே உள்ள இட ஒதுக்கீட்டுன் அடிபப்டையிலேயே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்’ என்று கூறி தெலுங்கானா அரசின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல் 42% இட ஒதுக்கீட்டிற்குத் தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தடை எதிர்த்து இன்று (18-10-25) தெலுங்கானா மாநிலம் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள்,முக்கிய அரசியல் கட்சிகளின் ஆதரவுடன், மாநிலம் முழுவதும் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது போக்குவரத்து அனைத்தும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (RTC) பேருந்துகள் பணிமனைகளிலேயே இருந்ததால் பொதுப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தீபாவளிக்கு பயணம் செய்ய விரும்பிய பயணிகள், மாநிலம் முழுவதும் பேருந்து நிலையங்கள் மற்றும் சந்திப்புகளில் சிக்கித் தவித்தனர்.
பிற்படுத்தப்பட்டோர் கூட்டு நடவடிக்கைக் குழு (BC JAC) அழைப்பு விடுத்திருந்த இந்த பந்த், ஆளும் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி (BRS) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகியோரால் ஆதரிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களின் போது, ​ பெட்ரோல் பம்பு தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அருகிலுள்ள கடைகளையும் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.