Supreme Court asks election commission Why should revision electoral roll confused with electoral process?
பீகார் மாநிலத்தில், இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தேர்தலுக்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போதில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையால், 20% புலம்பெயர்ந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும், இதனால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து இந்தியா கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்குகள், இன்று (10-07-25) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு துலியா மற்றும் ஜோமால்யா பாக்சி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த திருத்தம் தன்னிச்சையானது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பட்டியலில் உள்ள வாக்காளர்களை மீண்டும் சரிபார்க்க கட்டாயப்படுத்துகிறார்கள். ஆதார் அட்டை போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளைப் பயன்படுத்தாமல் இருந்த திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது’ என்று வாதிட்டார். அதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டதாவது, ‘ஆதார் அட்டைகளை குடியுரிமை மற்றும் வசிப்பிடத்திற்கான ஆதாரமாக எடுத்துகொள்ளப்பட மாட்டாது. ஏனென்றால் சில வெளிநாட்டினருக்கும் அடையாள அட்டை வழங்கப்படலாம். ஒவ்வொரு ஆவணத்திற்கு ஒரு நோக்கம் உள்ளது. இந்த நோக்கத்திற்காக ஆதார் பயன்படுத்தப்படாது.
அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் கூறியதாவது, “வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்ற உங்கள் செயல்பாடு பிரச்சனையல்ல. ஆனால், இந்த குறுகிய காலத்தில் இந்தப் பயிற்சியை நீங்கள் நிர்வகிக்க முடியுமா என்பதில் எங்களுக்கு கடுமையான சந்தேகங்கள் உள்ளன. நவம்பர் மாதத்தில் பீகார் தேர்தல் நடைபெற்ற உள்ள நிலையில் குறுகிய கால அவகாசத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது ஏன்? பீகாரில் 8 கோடி மக்கள் இருக்கிறார்கள். தீவிர திருத்த நடவடிக்கையால், இதை வரவிருக்கும் தேர்தலுடன் இணைக்க முடியுமா?.
குடிமக்கள் அல்லாதவர்கள் பட்டியலில் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த தீவிரமான செயல்முறையைக் கொண்டிருப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அது இந்தத் தேர்தலிலிருந்து தனித்தனியாக நடத்தப்பட வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் நடைமுறையோடு ஏன் குழப்ப வேண்டும். தேர்தல் இல்லாத நேரங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறையை செய்யலாமே?. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளின் பட்டியலில் ஆதார் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆவணங்களை மதிப்பாய்வு செய்த பிறகு, வாக்காளர் சரிபார்ப்புக்கான ஆவணங்களின் பட்டியலில் 11 ஆவணங்கள் உள்ளன, அவை முழுமையானவை அல்ல என்று தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, ஆதார், தேர்தல் புகைப்பட அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவை சேர்க்கப்பட வேண்டும் என்பது நீதியின் நலனுக்காக இருக்கும் என்று எங்கள் கருத்து” என்று கூறி இந்த வழக்கை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.