நிலநடுக்க அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை, நிலாவில் குடி அமர்த்திவிடலாமா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisment

நாட்டின் 75 சதவீத மக்கள், நிலநடுக்கம் அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பதாகவும், நிலநடுக்க பாதிப்புகளை தடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) வெளியிட்ட பூகம்ப மண்டல வரைப்படத்தில், இந்திய மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் பூகம்பங்களால் மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இடத்தில் வாழ்கிறார்கள். எனவே, பூகம்ப தயார்நிலை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

Advertisment

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்ரா ஆகியோர் அமர்வு முன்பு நேற்று (12-12-25) வந்தது. அப்போது அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “ பிரச்சினையைத் தீர்க்க மக்கள் அனைவரையும் நிலாவுக்கு மாற்ற வேண்டுமா? நில அதிர்வு ஆய்வுகள், சாத்தியமான பூகம்பங்களை மட்டுமே முன்னறிவிக்க முடியும். இவை அனைத்தும் அரசாங்கம் கவனித்துக்கொள்ள வேண்டிய கொள்கை விஷயங்கள். அதை அரசாங்கம் கவனித்துக் கொள்ள வேண்டும். அரசின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் தலையிட முடியாது” என்று அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.