supreme court
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் முட்டுக்கட்டை போடுவதாகத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக் கொள்ளப்படும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வழங்கியது.
அதோடு, ஆளுநர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆளுநருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை பெற்று தந்ததற்கு, திமுக தலைமையிலான தமிழக அரசுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதே சமயம், குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா?. என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கேள்வி எழுப்பியிருந்தார். இவருடைய கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜக்தீப் தன்கரின் விமர்சனத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்வினையாற்றினார்.
இத்தகைய சூழலில் தான், தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் சாசன விதிகளை மீறும் வகையில் உள்ளது எனத் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 அரசியல் சாசன கேள்விகள் அடங்கிய குறிப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த மே 15ஆம் தேதி அனுப்பி இருந்தார். அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேள்வி எழுப்பியுள்ளார். அதில், ‘இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200இன் அடிப்படையில் ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது அவர் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நீதிமன்ற தீர்ப்புகள் மூலமாக நிர்ணயிக்க முடியுமா?. அத்தகைய அதிகாரங்கள் நீதிமன்றங்களுக்கு இருக்கின்றதா?, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 201வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாக்கள் மீதான முடிவுகளை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியுமா?. இந்த தீர்ப்பை அளிப்பதற்கு முன்பு இத்தகைய அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்திருக்க வேண்டாமா?’ என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், நரசிம்மா, சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. அந்த வகையில், இந்த வழக்கின் விசாரணை இன்று (20-08-25) உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், ‘மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க நிலையான காலக்கெடுவை விதிப்பது அரசியலமைப்பால் வழங்கப்படாத அதிகாரங்களை எடுத்துக்கொள்வதற்குச் சமமாகும். இது அரசியலமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுக்கும். ஒரு மசோதா அனுப்பப்பட்டால் அதற்கு முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு என்று சில அதிகாரங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவர் தபால்காரர் அல்ல. ஆளுநர்கள் தங்கள் விருப்புரிமையை பயன்படுத்தி முடிவெடுக்கலாம். மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கு உள்ளது. தமிழ்நாடு விவகாரத்தில் அந்த அரசு அளித்த தகவல்களில் முரண் இருப்பதை காண்கிறோம்’ என வாதிட்டது.
இதனை கேட்ட உச்ச நீதிமன்றம், ‘ஆளுநர்கள் விருப்புரிமைய பயன்படுத்தியதால் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஒப்புதல் வழங்குவது, திருப்பி அனுப்புவதில் உள்ள காலதாமதமே முக்கிய பிரச்சனையாக உள்ளது. மசோதா நிறுத்தி வைக்கப்பட்டால் அது செயலிழந்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு, ஆளுநரின் விருப்பப்படியே செயல்படும் என்பதாக ஆகிவிடும். தமிழ்நாடு வழக்கில் ஆளுநர் 10 மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக அரசுக்கு தகவல் கூறவில்லலை. ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே நல்லிணக்கம் இருக்கும் என்ற அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் எதிர்பார்ப்புகளை நாடு பூர்த்தி செய்திருக்கிறதா?’ என்று கேள்வி எழுப்பியது.