கணவனை மனைவி சுற்றி வளைக்கக் கூடாது என ஒரு திருமண தகராறு வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் ரயில்வே துறையில் பணிபுரியும் ஒரு நபருக்கு, பாட்னாவில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் கடந்த 2018இல் திருமணம் நடைபெற்றுள்ளது. அரசு ஊழியர்களான இந்த தம்பதியருக்கு 5 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த சூழ்நிலையில், தனது பெற்றோருடன் வசிக்கும் மனைவி தனது குடும்பத்தினரோடு சேர்ந்து வசிக்குமாறு கணவரை வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு கணவன் மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக, இருவரும் 2023ஆம் ஆண்டில் இருந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால், அவர்களது குழந்தைகள் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது பெற்றோருடன் வாழ முடியாது என்று கூறியதால் கணவனுக்கு எதிராக மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, ‘மனைவி தனது கணவரை சுற்றி வளைக்கக்கூடாது. இருவரும் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக தங்கள் ஈகோக்களை ஒதுக்கி வைக்க வேண்டும். குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, மத்தியஸ்தம் மூலம் தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்து சேர்ந்து வாழ முயற்சியுங்கள்’ என்று கூறி தம்பதியருக்கு அறிவுரை வழங்கினர்.