'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 155 க்கு மேற்பட்ட தொகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வைத்திருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டது. அதேநேரம் டெல்லி சென்ற செங்கோட்டையன் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தது அதிமுகவில் பேசு பொருளாகி இருந்தது.அதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவுடன் சந்திப்பு மேற்கொண்டிருந்தார்.
இந்தநிலையில் ஈரோட்டில் உள்ள செங்கோட்டையனின் வீட்டை நோக்கி தொண்டர்கள் மாட்டு வண்டியில் படையெடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு படையெடுத்து வந்த அதிமுக தொண்டர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுக ஜெயலலிதாவால் காக்கப்பட்டது. செங்கோட்டையனின் தலைமை ஏற்று ஒருங்கிணைந்த, ஒன்றுபட்ட அதிமுக வேண்டும் என்று கலிங்கம் ஊராட்சியில் இருந்து நாங்கள் அதிமுக முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வந்திருக்கிறோம். மாட்டு வண்டி, ஆட்டோ, கார், பைக், வேனில் செங்கோட்டையனை ஆதரித்து கலிங்கம் ஊராட்சியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்திருக்கிறோ.ம் ஒன்றுபட்ட அதிமுக வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறோம். பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்ந்து ஒன்றுபட்ட அதிமுக வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை'' என்றனர்.