அஜாக்கரதையாக செயல்பட்ட எஸ்.ஐ; உள்ளே வந்த உயர் அதிகாரிகள் - கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

Untitled-1

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரை மர்ம நபர்கள் கொலை செய்து, மலுமிச்சம்பட்டியில் உள்ள கிணற்றில் கல்லைக் கட்டி வீசிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் முருகப்பெருமாள் ஆகியோர், “நாங்கள்தான் ஜெயராமனைக் கொலை செய்து கிணற்றில் வீசினோம்” என செட்டிபாளையம் காவல் நிலையத்தில் சரணடையும் வரை இந்த விவகாரம் காவல்துறைக்கு தெரியவில்லை. மேலும், இந்தக் கொலையை இரண்டு மாதங்களுக்கு முன்பே செய்துவிட்டதாக அவர்கள் கூறியது, காவல் நிலையத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது, சூலூர் காவல் ஆய்வாளர் லெனின், செட்டிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பையும் கவனித்து வந்தார்.

அதன்பிறகு, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முருகப்பெருமாள், பாலமுருகன் மற்றும் ஜெயராமன் ஆகிய மூவரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தியதாகத் தெரியவந்தது. அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் முருகப்பெருமாள் ஜெயராமனை அடித்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அவரது உடலை அருகிலுள்ள கிணற்றில் கல்லைக் கட்டி வீசிவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, ஜெயராமனின் உடல் கிணற்றிலிருந்து எலும்புக்கூடாக மீட்கப்பட்டது. பின்னர், சரணடைந்த பாலமுருகன் மற்றும் முருகப்பெருமாளை லெனின் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், ஜெயராமன் கொலை வழக்கில் ஏதோ தவறு நடந்திருப்பதை உயர் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதுகுறித்து, டி.ஐ.ஜி. சசி மோகன் தலைமையில் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தினர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முதலில், முருகப்பெருமாள் சரணடைந்தாலும், அவருக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது.

பின்னர், வேறு யார் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம்...? என்று விசாரணையைத் தீவிரப்படுத்திய போது, பாளையங்கோட்டையைச் சேர்ந்த நியூட்டன் மற்றும் பெனிட்டோ ஆகியோர் இணைந்து இந்தக் கொலையைச் செய்தது கண்டறியப்பட்டது.  ஜெயராமன் ஆட்டோ வாங்குவதற்காக நியூட்டன் மற்றும் பெனிட்டோ இருவரும் தனியார் நிறுவனம் மூலம் வாகனக் கடன் பெற்று கொடுத்துள்ளனர். ஆனால், அந்தப் பணத்தை  அவர் முறையாகத் திருப்பிக் கொடுக்காததால் ஆத்திரத்தில் இருவரும்  ஜெயராமனை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர், ஜெயராமனின் உடலை மலுமிச்சம்பட்டிக்கு எடுத்து வந்து பாலமுருகன் மற்றும் முருகப்பெருமாள் உதவியுடன் கிணற்றில் கல்லை கட்டி வீசியது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து, கொலை செய்த நியூட்டன், பெனிட்டோ மற்றும் உடந்தையாக இருந்த பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், ஜெயராமன் கொலை வழக்கை முறையாக விசாரிக்காமல் அலட்சியமாகச் செயல்பட்ட காவல் ஆய்வாளர் லெனினை, டி.ஐ.ஜி. சசி மோகன் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். கொலை வழக்கை முறையாக விசாரிக்காத ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore nellai police sub Inspector
இதையும் படியுங்கள்
Subscribe