தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தற்காலிக ஊழியர்களுக்கு உடனடியாக அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 8 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை தற்காலிக  அடிப்படையில் பணியாற்றி வரும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், அவற்றை நிறைவேற்ற தமிழக அரசு மறுத்து வருகிறது. சமூகநீதிக்கு எதிரான தமிழக அரசின்  இந்தப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணி என்பது  மக்களுக்கு நேரடியாக சேவை செய்யும் பணியாகும். மக்களின் பசி தீர்ப்பதில் இந்த பணியாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. மக்களுக்கு உணவு படைக்க தேவையான நெல் உள்ளிட்ட தானியங்களை கொள்முதல் செய்வது, அவற்றை பாதுகாத்து வைத்து அரிசியாக மாற்றுவது,  நியாயவிலைக்கடைகள் மூலம் மக்களுக்கு வழங்குவது உள்ளிட்டவை அவர்களின் பணியாகும். ஆனால், இவற்றை செய்யும் பணியாளர்களுக்கு  அவர்களின் வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமான ஊதியம் வழங்கப்படுவதில்லை; அவர்களுக்கு பணிப் பாதுகாப்பு இல்லை என்பது தான் வேதனையான உண்மை ஆகும்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட  மண்டலங்கள் தவிர்த்து 25 மண்டலங்களில் பருவகால எழுத்தர்கள், பருவகால உதவியாளர்கள்,  பருவகால காவல்காரர்கள் என மொத்தம் 6,874 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் 2012-ஆம் ஆண்டு முதலும், வேறு பலர் 2018ஆம் ஆண்டு முதலும் பணியாற்றி வருகின்றனர்.  8 முதல் 12 ஆண்டுகள் பணியாற்றி தங்களது  வாழ்நாளின் இளமைக்காலத்தைத்  தொலைத்த பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவது தான் சமூகநீதியாக இருக்கும்.

Advertisment

ஆனால், சமூகநீதியை கிஞ்சிற்றும் மதிக்காத  தமிழக அரசு, அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்பதற்குக் கூட தயாராக இல்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி பல முறை அவர்கள் போராட்டங்களை நடத்திய போதிலும், அவற்றை அரசு கண்டுகொள்ளவில்லை. அதனால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பணியாளர்கள் கடுமையான பாதிப்புகளுக்கும்,  மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். அவர்களின் துயரங்கள் இனியும்  தொடர அனுமதிக்கக்கூடாது.

எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 8 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும். அவர்கள் இதுவரை பணி செய்த ஆண்டுகளை கணக்கிட்டு, அதற்கேற்ற வகையில் அவர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.