கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிப்பதற்கு எதிராக தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் சிபிஐ விசாரணை கூறியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விசாரணையானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு மதுரை கிளையில் உள்ள நிலையில் ஏன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தினார் எனக் கேள்வி எழுப்பி, தமிழக அரசிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று (13-10-25) தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், சிபிஐ விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது சிபிஐ விசாரணை கோரிய மனுதாரர்களாக கூறப்பட்ட பிரபாகர், செல்வராஜ், பன்னீர்செல்வம் ஆகியோர் தாங்கள் மனு தாக்கல் செய்யவே இல்லை என்றும் தங்களுக்கு தெரியாமலேயே உச்ச நீதிமன்றத்தில் தங்கள் பெயர்களில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறி புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் மகனை இழந்த பன்னீர்செல்வம், மனைவியை இழந்த செல்வராஜ் மற்றும் சகோதரியை இழந்த பிரபாகர் ஆகியோர் புதிய மனுக்களை தாக்கல் செய்திருப்பது இவ்வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.