காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் காவலராக பணிபுரிந்து வரும் லோகேஸ்வரன் என்பவரின் மாமனார் சிவகுமார் என்பவர் அப்பகுதியில் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் தான் சிவக்குமாருக்கும், பூச்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே கடந்த ஆகஸ்ட் மாதம் முன் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து முருகன் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பின்னர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தாமாக முன்வந்து, காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
அப்போது காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேசை கைது செய்து சிறையில் அடைக்கக் கடந்த 8 ஆம் தேதி (08.09.2025) உத்தரவிட்டார். இதனையடுத்து மாவட்ட நீதிபதி செம்மலுக்கும் , அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த லோகேஷ்வரனுக்கும் இடையே நிலவிய தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவே டி.எஸ்.பி. சங்கர் கணேசை கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாகக் கூறி காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், டிஎஸ்பி சங்கர் கணேசை சிறையில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட நீதிபதி செம்மலின் உத்தரவை ரத்து செய்தார். அதோடு அவரை உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவிட்டார்.
மேலும் இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளர் விசாரித்து அறிக்கை அளிக்கும்படியும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ் குமார் அமர்வில் இன்று (23.09.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை அறிக்கையை விஜிலன்ஸ் பதிவாளர் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எம். முகிலன் வாதிடுகையில், “மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவின் பெயரிலேயே சம்பந்தப்பட்ட பேக்கரியை உணவுப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் நிர்வாக ரீதியாக மாவட்ட நீதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் விஜிலன்ஸ் பதிவாளரின் விசாரணை அறிக்கையைச் சென்னை உயர்நீதிமன்ற குழுவுக்கும், நீதிபதிகள் பணியிட மாற்றக் குழுவுக்கும் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்