பீகார் மாநிலத்தில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அதனை தொடர்ந்து நிதிஷ் குமார் அம்மாநிலத்தில் 10வது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வந்தார். அதன்படி, அம்மாநிலத்தில் தேசிய ஜனநாயககக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த சூழ்நிலையில், அவர் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநிலங்களவை தேர்தலுக்காக இன்று (05.03.2026) வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார் என்று தகவல் வெளியாகியிருந்தது. பீகாரின் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்யும் பட்சத்தில் அம்மாநிலத்தில் பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம், பா.ஜ.கவில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் பீகாரின் முதல் முதல்வர் என்று சொல்லப்படுகிறது. அதே போல் துணை முதல்வராக நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் பதவி ஏற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisment

மாநிலங்களவைப் பதவிக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்யும் நிதிஷ் குமார், மார்ச் 16ஆம் தேதி நடக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக (20 ஆண்டுகள்) என் மீது நீங்கள் (பீகார் மக்கள்) தொடர்ந்து நம்பிக்கையும் ஆதரவையும் வைத்து வருகிறீர்கள். அதன் பலத்தால்தான், பீகாரிற்கும் உங்கள் அனைவருக்கும் என்னால் முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய முடிந்தது. உங்கள் நம்பிக்கையும் ஆதரவுமே பீகாரை இன்று வளர்ச்சி மற்றும் பெருமையின் புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதற்காக நான் ஏற்கனவே பலமுறை உங்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துள்ளேன்.

nithish-kumar-mic-1

எனது நாடாளுமன்ற வாழ்க்கை தொடங்கிய காலத்திலிருந்தே, பீகார் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் (சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவை), நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) உறுப்பினராக வேண்டும் என்ற விருப்பம் என் மனதில் இருந்தது. அந்த வகையில், தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினராக விரும்புகிறேன். உங்களுடன் எனக்குள்ள இந்த உறவு எதிர்காலத்திலும் தொடரும் என்றும், உங்களுடன் இணைந்து ஒரு வளர்ந்த பீகாரை உருவாக்கும் உறுதிப்பாடு முன்னெப்போதையும் போலத் தொடரும் என்றும் முழு நேர்மையுடன் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். அமையப்போகும் புதிய அரசுக்கு எனது முழு ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் எப்போதும் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisment

இதற்கிடையே பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மாநிலங்களவைக்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாட்னாவில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே ஐக்கிய ஜனதா தளம்  கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போராட்டக்காரர் ஒருவர் கூறுகையில், “அவர் (நிதிஷ் குமார்) தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். நாங்கள் தொடர்ந்து போராடுவோம். சாலைகளை மறிப்பதுடன், தர்ணா போராட்டத்திலும் ஈடுபடுவோம்”என்று தெரிவித்துள்ளார்.

nithish-oath

நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், 1990களில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைத்தது. 2014இல் பா.ஜ.கவுடனான கூட்டணியை முறித்த நிதிஷ் குமார், 2015இல் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து அம்மாநில சட்டமன்றத் தேர்தலை சந்தித்தார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று நிதிஷ் குமார் முதல்வராக பணியாற்றினார். அதன் பின்னர், அந்த கூட்டணியில் இருந்து விலகி 2017இல் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். இதனையடுத்து, பா.ஜ.கவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார் 2022இல் மீண்டும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். இதற்கிடையில் கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்காக, நிதிஷ் குமார் எடுத்த முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி உருவானது. 

இதனிடையே நிதிஷ் குமார், இந்தியா கூட்டணியில் இருந்தும் பீகாரில் இருக்கும் மகா கூட்டணியிலிருந்தும் விலகி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். அதனை தொடர்ந்து பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து தொடர்ச்சியாக 10வது முறையாக முதல்வராக பதவி ஏற்றார். கடந்த 2015ஆம் ஆண்டு தற்போது வரையிலான 11 ஆண்டுகளில் அவர் தொடர்ச்சியாக முதல்வராக பதவி வகித்து வருவது  குறிப்பிடத்தக்கது.