வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே காங்கேயநல்லூர் பகுதியில் ஒரு கட்டிடத்தில் திடீரென ஏசியில் தீ ஏற்பட்டு புகை அதிகளவில் வந்துள்ளது. அதைப் பார்க்கும் நேரத்தில் தீ மளமளவெனப் பரவி, கட்டிடம் முழுவதும் பரவியதால், அந்தக் கட்டிடத்தின் கீழ் தளத்தில் சிறுவர் பள்ளி (ப்ளே ஸ்கூல்) இருந்ததால், தகவல் அறிந்து உடனடியாக பள்ளியில் இருக்கும் குழந்தைகள் அனைவரையும் பத்திரமாக மீட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். உடனடியாக வேலூர் தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில், மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் இருபதுக்கும் மேற்பட்டோர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளியின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி அருகே வந்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்து குறித்து விருதம்பட்டு காவல்துறையினர், மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென ஏசியில் புகை வந்து தீ மூட்டமாகக் காட்சியளித்தது, அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.