தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (23.08.2025) மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலையில் இருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இத்தகைய சூழலில் தான் மதியம் 3 மணி அளவில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
அச்சமயத்தில் பரமக்குடி அருகே உள்ள வாழவந்தாம்பு கிராமத்தைச் சேர்ந்த நூருல் - அமீன் ஆகியோரது மகள்களான சையது அஸ்மிதா பானு (வயது 13), சபிகா பானு (வயது 10) ஆகிய இருவரும் வீட்டில் அருகே உள்ள வேப்பம் மரத்தின் விதையை (வேப்பம் முத்து) சேகரிப்பதற்காக வேப்ப மரத்தின் அடியில் இருந்துள்ளனர். அப்போது திடீரென மழை பெய்த நிலையில் வேப்ப மரத்தின் அடியில் இருந்த போது மரத்தில் மின்னல் தாக்கியுள்ளது. இதில் சிறுமிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சனிக்கிழமையான இன்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் மதிய உணவு அருந்துவிட்டு அதன் பின்னர் வேப்ப மரத்தின் அடியில் அதன் விதையை சேகரிக்கும் போது மின்னல் தாக்கி சகோதரிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீசார், இருவரின் உடலையும் கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த சிறுமிகளின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த சையது அஸ்மிதா பானு அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பும், சபிகா பானு ஐந்தாம் வகுப்பு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/23/rmd-lighting-woman-2025-08-23-17-12-07.jpg)