2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை என தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் புதிதாக தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சியை ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த 13ஆம் தேதி தனது முதல் சுற்றுப்பயணத்தை தொடங்கியிருந்தார்.
முன்னதாகவே ஒரு நாளைக்கு மூன்று மாவட்டங்கள் என சுற்றுப்பயணம் திட்டமிட்டிருந்தது. அதன்படி திருச்சியில் 13 ஆம் தேதி சுற்றுப்பயணம் தொடங்கிய விஜய் அன்றைய நாளே பெரம்பலூர் மற்றும் அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால் ரசிகர்கள் அதிகமாக ஒன்று சேர்ந்ததால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக விஜய் திருச்சியில் அனுமதிக்கப்பட்ட மரக்கடை பகுதியில் பேசவே பிற்பகலுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் திட்டமிட்டபடி பெரம்பலூரில் பயணம் மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அரியலூரில் மட்டும் விஜய் உரையாற்றி முடித்தார்.
தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் அந்தந்த காவல் நிலையங்களில் விஜய் உரையாற்றுவதற்கு அனுமதி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு நாளுக்கு மூன்று மாவட்டங்கள் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டு மாவட்டமாக குறைத்துக் கொண்டு சுற்றுப்பயணத்திற்கு விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.