தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் (20.09.2025) சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் வரும் வாரம் சனிக்கிழமை 27 ஆம் தேதி சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய விஜய் திட்டமிட்ட நிலையல் மாற்றப்பட்டுள்ளது. மாற்றத்தின்படி கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
முதலாவதாக நாமக்கல் மாவட்டத்தில் வரும் 27ஆம் தேதி காலை 11 மணியளவில் உரையாற்ற இருக்கிறார். மாலை 3 மணி அளவில் கரூரில் உரையாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் அக்டோபர் 4 ஆம் தேதி சனிக்கிழமை வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் விஜய் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இதற்கு முன்னதாக அக்டோபர் நான்காம் தேதி கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்ட நிலையில் அதுவும் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் சுற்றுயப்பயண திட்டம் முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் மாற்றியமைக்கப்பட்ட புதிய பயண திட்டம் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.