Sudden change in itinerary; Modi-EPS meeting? Photograph: (admk)
தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது முதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.
அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் ஏற்கனவே தொகுதி வாரியாக தேதிகளை திட்டமிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒரு நாளைக்கு மூன்று தொகுதிகளில் பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள ஆடித் திருவாதிரை திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருந்தது. இதற்காக வரும் 26 ஆம் தேதி தூத்துக்குடிக்கு மோடி வர இருக்கிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 26 ஆம் தேதிக்கு பதில் 29ம் தேதியில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் இபிஎஸ் பயணம் மேற்கொள்வார் என்று பயணத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் 26 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காகவே இந்த பயண திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-இபிஎஸ் சந்திப்பின்போது பாஜக-அதிமுக கூட்டணி அறிவிப்பு வெளியாகி இருந்து. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி- மோடி சந்தித்தால் கூட்டணிக்கு பிறகு இருவருக்குமான முதல் சந்திப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.