நாகப்பட்டினம் மாவட்டம் பாபாகோவில் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் 30 வயதான மணிகண்டன். ஆட்டோ ஓட்டுநரான இவர், தனது இரு சக்கர வாகனத்திற்குப் பெட்ரோல் போட கருவேலங்காடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குக்கு வந்தார். அப்போது சாலை குறுக்கே பெட்ரோல் பங்க்கை நோக்கி வண்டியைத் திருப்பியபோது, வேளாங்கண்ணியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த கார் மணிகண்டன் மீது மோதியது.
இதில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்து பதறிய அக்கம்பக்கத்தினர் வேளாங்கண்ணி போலீசாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே விபத்து ஏற்படுத்திய காரைப் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மணிகண்டனின் உறவினர்கள் கதறி அழுத காட்சி அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், இரு சக்கர வாகனம் மீது மோதி மணிகண்டன் தூக்கி வீசப்படும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us