கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ளது சுசீந்திரம். இங்குப் பிரசித்தி பெற்ற தாணுமாலய சாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் ஒன்றுள்ளது இருக்கிறது. இந்த தெப்பக்குளத்தைத் தூர்வார வேண்டும் எனப் பக்தர்கள் மற்றும்  அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் கோவிலைத் தூர்வாருவதற்கு 45 லட்ச ரூபாயும், பாத்திர குளத்தைத் தூர் வாருவதற்கு 15 லட்சம் ரூபாயும் என மொத்தம் 60 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. 

Advertisment

அதனைத் தொடர்ந்து அதற்கான பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. அதன்படி குளத்தைத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்தன.இதன் ஒரு பகுதியாகக் குளத்தில் இருந்த மண் எடுக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாகவும் தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வருவதாலும் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள மதில் சுவர்கள் வலுவிழந்து இன்று (13.11.2025) காலை இடிந்து  விழுந்து விபத்துக்குள்ளானது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். 

Advertisment

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் இடிந்து விழுந்த மதில் சுவர்களைப் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அதோடு அந்தப் பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போக்குவரத்து  தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுடைய பாதுகாப்பு கருதி உடனடியாக அந்த இடிந்து விழுந்த மதில் சுவர்களைச் சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிலின் தெப்பக்குள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.