கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்த நிலையில் 39 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பேசிவிட்டு அங்கிருந்து சென்ற பின்பு, கூட்டம் கலைந்த போது தான் குழந்தைகள், பெண்கள் என 20க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்திருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள 04324 259306 , 7010806322 (வாட்ஸ் அப்) உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பிரச்சாரத்தின் போது உயிர்காக்கும் பிஎல்எஸ் ஆம்புலன்ஸ் இல்லாததே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என தெரியவந்துள்ளது. தற்போது வரை 111 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கரூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இறந்தவர்கள் உடலானது உறவினர்களிடம் ஒப்படைக்க கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு தரப்பிலிருந்து இரங்கல் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர் என நாட்டின் முக்கிய தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 14 பேர் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டம் ஏமூர் என்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரு பெண் உடல் மட்டும் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்பு சம்பவம் குறித்து தவெக நிர்வாகிகள் இதுவரை யாரும் வெளிப்படையாக பேசாத நிலையில் தவெகவின் நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''நேற்று மாலை கரூரில் நடந்த மிக மிக துயரமான சம்பவம். இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கவே கூடாது. அரசு முழு பாதுகாப்பு கொடுத்திருந்தாலும் இப்படி ஒரு மிகப்பெரிய துயரம் என்பது நடந்து 39 பேரை இந்த விபத்தில் இழந்திருக்கிறோம். ஏற்கனவே முதல்வர் செய்தி கேள்விப்பட்டவுடன், அங்கு இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சித் தலைவர், பக்கத்து மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள், பக்கத்து மாவட்டங்களில் இருக்கக்கூடிய அனைத்து அமைச்சர் பெருமக்களும் உடனே அந்த பகுதிக்கு வரவழைத்து என்னென்ன மருத்துவ உதவிகள் தேவையோ அதை எல்லாம் செய்து கொடுத்திருக்கிறார். முதலமைச்சர் மிகுந்த சோகத்தில் உள்ளார். அவரால் பார்க்க முடியவில்லை. 30 பேருடைய உடல் பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் ஒன்பது உடல்களுக்கு பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் முடிந்துவிடும். இங்கு அரசியல் பேச விரும்பவில்லை. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/28/a5376-2025-09-28-09-54-04.jpg)