காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கலந்து இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் தற்போது சம்பா சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் இடங்களில் நாற்றாங்கால் விடுபட்டும், சில இடங்களில் நாற்று நட்டு பயிர்கள் பச்சை பிடித்து வளர்ந்து வருகிறது. இந்நிலையில் பெய்த மழையின் காரணமாக நெல் பயிர் நடவு செய்துள்ள நிலங்களுக்குள் 2 அடிக்கு மேல் மழை நீர் தேங்கி நின்றது. இதில் குறிப்பாக ஆட்சியாள்புரம், கஞ்சாங்கொல்லை, குச்சிபாளையம், புத்தூர், ஈச்சம்பூண்டி மற்றும் சுற்றுவட்டார 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் 300 ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி இருந்தது. மழைநீரை உடனடியாக வடிய வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையறிந்த தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்திரவின் பேரில் சிதம்பரம் உட்கோட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் வியாழக்கிழமை கஞ்சங்கொல்லை, கொண்டாயிருப்பு, சிறுகாட்டூர், ஆச்சாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்களை கீழணை உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன். வல்லம்படுகை உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் கொண்ட பொதுப்பணித்துறை குழுவினரை சம்பந்தப்பட்ட கிராம பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு மழை நீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கிராம பகுதிக்கு சென்ற பொதுப்பணித்துறையினர் கீழணையில் இருந்து பிரியும் கஞ்சங்கொல்லை வாய்க்கால் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் வரை தூர்வாரப்பட்டுள்ள நிலையில் வேளாண்மை பொறியியல் துறைக்கு சொந்தமான சி ,டி, பிரிவு வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் தண்ணீர் தேங்கியுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/09/a5467-2025-10-09-18-57-44.jpg)
இதில் கனரக இயந்திரங்களை பயன்படுத்தி தூர்வார முடியாது என்பதாலும் விவசாயிகளை ஒன்றிணைத்து பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ரமேஷ் மேற்பார்வையில் தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வாய்க்காலில் தண்ணீர் உள்ளதால் வரும் மார்ச் மாதத்தில் கஞ்சங்கொல்லை வடிகால் வாய்க்கால் தடுப்பு கட்டைகள் அமைத்து தூர்வாரப்படும். அதேபோல் ரெட்டியூர், பிராயடி உள்ளிட்ட பகுதிகளில் மணவாய்க்கால் தூர்வாரும் பணியையும் ஆய்வு மேற்கொண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்படும் என விவசாயிகளிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிதம்பரம் உட்கோட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான வாய்கால்களை ஏற்கனவே தூர்வாரி உள்ளனர். வயல்வெளிக்கு நடுவே சிறிய அளவில் உள்ள வாய்க்கால்கள் கிராம ஊராட்சி மற்றும் வேளாண்மை பொறியியல் துறைக்கு சொந்தமானது. இதை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் அவர்களின் வயலுக்கு அருகே உள்ள இடத்தில் விவசாயிகள் ஒருங்கிணைந்து தூர்வாரி சுத்தம் செய்து கொள்வார்கள் தற்போது அப்படி விவசாயிகள் செய்வது இல்லை. இதனால் சிறு வாய்க்கால்களில் கூட மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.
வாய்க்காலில் தண்ணீர் நின்றாலே பொதுப்பணித்துறை வாய்கால்கள் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். அது அப்படி அல்ல விவசாயிகளின் நலன் கருதி அனைத்து தண்ணீரும் வடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.