Sub-collector sent out of office Transgender women and they are suddenly struggle in chidambaram
சிதம்பரம் சார் ஆட்சியரைச் சந்திக்க வந்த திருநங்கைகளை, ‘வெளியே போ’ என சொன்ன சார் ஆட்சியரை கண்டித்து திருநங்கைகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அடுத்துள்ள மணலூர், லால்பூரம் பகுதியில் சுமார் 40க்கு மேற்பட்ட திருநங்கைகள் வீடு வாடகை எடுத்து வசித்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக, தங்களுக்கு மனை பட்டா வழங்கி வாழ்வாதாரம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் சார் ஆட்சியர் என பல்வேறு தரப்பு அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (12-11-25) 20 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சிதம்பரம் சார் ஆட்சியரை சந்திக்க வந்தனர். அதனை தொடர்ந்து திருநஞ்கைகள் மைனா, அருவி, சமந்தா ஆகிய 3 பேர் மட்டும், சார் ஆட்சியர் கிஷன்குமாரை சந்தித்து மனு அளிக்க அவரது அரைக்குள் சென்று இலவச வீட்டு மனை, டிகிரி படித்த திருநங்கைகளுக்கு வேலை, சமூகத்தில் அங்கீகாரம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து, அது குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது, மீண்டும் மீண்டும் கோரிக்கை குறித்து பேசியுள்ளனர். இதனை திருநங்கைகள் வீடியோ எடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த சார் ஆட்சியர் கிஷன்குமார், திருநங்கைகளை பார்த்து வெளியே போங்கள் என சத்தம் போட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சார் ஆட்சியர், அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் திருநங்கைகளை, அலுவலகத்தை விட்டு வெளியேற்றினார். இதில் ஆத்திரமடைந்த திருநங்கைகள், சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு, திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர் . இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் திருநங்கைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை மீண்டு சார் ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்த வைத்து அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சார் ஆட்சியர் கிஷன்குமார் கூறுகையில், ‘திருநங்கைகளுக்கு டி.எஸ்.பேட்டையில், மனை பட்டா வழங்க முடிவு செய்து, இடம் தேர்வு செய்தோம். ஆனால் துாரமாக உள்ளது என அவர்கள் வேண்டாம் என கூறினர். பின்னர் சிதம்பரம் அருகே கீரப்பாளையத்தில் பார்த்து இடம் ஒதுக்கியுள்ளோம். அதுவும் வேண்டாம் என கூறியுள்ளனர். தற்போது இருக்கும் இடத்திலேயே வேண்டும் என கூறினார். அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், மனு கொடுக்க உள்ளே வந்த 3 திருநங்கைகளின், ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டு, எங்களை அலைய வைக்கறீங்க, நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என சத்தம் போட்டு வீடியோ பதிவு செய்தனர். இதனால் நான் சத்தம் போட்டு வெளியில் அனுப்பினேன். மேலும், இதுகுறித்து நான் உட்பட, அலுவலக ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். எங்களால் என்ன செய்ய முடியுமோ அந்த பணியை நாங்கள் செய்துள்ளோம்’ எனத் தெரிவித்தார்
Follow Us