su venkatesan speech in the parliamentary debate on Operation Sindoor
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலுமே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த 1 வாரமாக நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடக்காமல் முடங்கியது.
கடந்த 1 வாரமாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று (28-07-25) நாடாளுமன்ற மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பேசினர்.
இந்த விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பியான சு.வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் பேசியதாவது, “பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக தேசமே ஒன்றுபட்டு நிற்கிறது. பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்த அரசு கொடுத்த எதிர்வினை, அதுசார்ந்த விவாதத்தை பொறுப்புணர்ச்சியோடு இந்த அவையில் நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். கடந்த 2 மாதங்களாக எதிர்க்கட்சிகள் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொண்டிருக்கிறார்கள். அந்த 2 மாதங்களாக பொறுப்புணர்ச்சி என்றால் என்ன? என்று விடை கேட்பதை போல ஆளுங்கட்சி தொடர்ந்து வினையாற்றிக் கொண்டிருக்கின்றது. 2016ஆம் ஆண்டு உரி தாக்குதலின் போது ஆளுங்கட்சி என்ன சொன்னதோ, 2019ஆம் ஆண்டு பாலக்கோடு தாக்குதலின் பின்னணியில் ஆளுங்கட்சி என்ன சொன்னதோ அதை தான் இன்றைக்கு மீண்டும் இவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் பேசிய இவ்வளவுக்கும் பிறகு பயங்கரவாத பஹல்காம் தாக்குதல் எப்படி நடந்தது? தாக்குதல் நடந்த ஒன்றரை மணிக்குப் பிறகு தான் தகவலோ உதவியோ அரசுக்கு கிட்டிருக்கிறது என்ற செய்தி எவ்வளவு பெரிய வெட்கக்கேடானது?
இது ராணுவத்தின் தோல்வி, சிஆர்பிஎஃப்பின் தோல்வி, ஜம்மு காஷ்மீரின் காவல்துறையினுடைய தோல்வி ஆக இந்த சம்பவத்தில் மூன்றடுக்கு தோல்வி நடந்திருக்கிறது. இந்த தோல்விக்கு யார் பொறுப்பேற்றப்போவது?. அதிகாரிகளா? அமைச்சர்களா? ஒரே தேசம் ஒரே தலைவர் என்று நீங்கள் சொல்லுகின்ற பிரதமரா? யார் பொறுப்பேற்ற போகிறார்கள்?. நீங்கள் ஆட்சிக்கு முன்பு வரை நடந்த அனைத்து சம்பவங்களுக்கு நேருவில் தொடங்கி மன்மோகன் சிங் வரை பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்வீர்களே, இப்போது நீங்கள் யாரை கையை காட்டப்போகிறீர்கள்?. இந்த தாக்குதல் நடந்த போது சவுதி அரேபியாவில் இருந்த நமது பிரதமர் மோடி, தன்னுடைய பயண திட்டத்தை குறுக்கி கொண்டு உடனடியாக புறப்பட்டார். நேரடியாக பஹல்காமுக்கு போகப்போகிறாரோ? ஜம்மு காஷ்மீருக்கு போகப்போகிறாரோ? என நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் நேரடியாக பீகாரினுடைய தேர்தல் பேரணிக்குச் சென்றார். எங்கள் இதயங்களில் தேசம் இருக்கிறது, உங்கள் இதயங்களில் தேர்தல் மட்டும் தான் இருக்கிறது என்பதை இந்த நாடு தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.
சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை கூட்டுங்கள் என்று நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். இந்த நாடாளுமன்றம், ஜனநாயகத்தின் கோவில் என்று பிரதமர் கூறினார். சரி, கோயிலுக்கு வாருங்கள் என்று நாங்கள் அழைக்கிறோம். கோயிலுக்கு வர இவ்வளவு பயப்படுகிற ஒரு பிரதமரை நீங்கள் கொண்டிருப்பது சரியா?, நியாயமா? அதுவும் சிறப்பு வழிப்பாட்டுக்கு வாருங்கள், சிறப்பு கூட்டத்தொடருக்கு வாருங்கள் என்று நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்கிறோம். இங்கே வராமல் பீகாருக்குச் சென்று, கற்பனை செய்ய முடியாத அளவுக்கு நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று பிரதமர் பேசுகிறார். கற்பனை செய்யமுடியாத தாக்குதலை நடத்துவார் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். நடத்தினா, யார் நடத்தினார்? அமெரிக்க அதிபர் டிரம்ப் கற்பனை செய்ய முடியாத தாக்குதலை நடத்தினார். இந்த பிரச்சனையில் அதிகமாக தோல்வி அடைந்திருப்பது உள்துறை அமைச்சகமா? அல்லது வெளியுறவுத்துறை அமைச்சகமா? என்ற விவாதத்தை நடத்தி கொண்டிருக்கிறது எதிர்க்கட்சிகள்.
சர்வதேச நிதியமான ஐஎம்எஃப், பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதை இந்தியாவால் தடுக்க முடியவில்லை. ஐஎம்எஃப் நிர்வாகக் குழுவில் 25 நாடுகள் இருக்கிறது. ஒரு நாடு கூட இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. உலக அரங்கில் இந்தியாவை தனிமைப்படுத்தி வைத்திருக்கிறீர்கள். பாலஸ்தீன பிரச்சனையில் ஐநா தீர்மானத்தில் இருந்து விலகியது, ஈரான் மீதான தாக்குதல் பிரச்சனையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கையில் கையெழுத்து போடாதது, டிரம்ப்பின் பேச்சுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றாதது என சர்வதேச அரங்கில் இந்தியாவை கோழை நாடாக நிறுத்தி இருக்கிறீர்கள். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குறிப்பிட்டதை போல, இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு சொல்வதற்கு அனைத்து கட்சி குழுவை நீங்கள் அனுப்புனீர்கள். எதிர்க்கட்சிகள் அனைவரும் இதில் பங்கெடுத்தார்கள். கடந்த காலங்களில் யாரெல்லாம் தேச துரோகிகள் என்று சொன்னீர்களோ, அந்த தேச துரோகிகளில் பலர் எதிர்க்கட்சி குழுவில் பங்கெடுத்தோம். ஏனென்றால் எங்களுக்கு தேசம் தான் முக்கியம். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு குழுவில் ஒன்று அல்லது இரண்டு இஸ்லாமிய உறுப்பினர்கள் பங்கெடுத்தார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவத்தை கொடுத்த முதல் விஷயம் இதுதான். அதை கொடுத்தவர்கள் எதிர்க்கட்சிகள் தான்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து சோழர்களுடைய பேரரசை நினைவுப்படுத்தி சோழர்கள் நடத்திய போரையும் ஆபரேஷன் சிந்தூரையும் இணைத்துப் பேசியிருக்கிறார். இந்தியாவில் இருந்த ஒரு பேரரசு கடல் கடந்த வெற்றியை பெற்றதென்றால் அது சோழ பேரரசு மட்டும் தான். அந்த வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா? ராஜராஜ சோழனோ, ராஜேந்திர சோழனோ தான் நடத்திய அனைத்து போரையும், தான் ஆரம்பித்த எல்லா போரையும் அவன் தான் முடித்தானே தவிர பக்கத்து நாட்டு மன்னன் முடித்து வைக்கவில்லை. மோடி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூரை முடித்து வைத்தது அமெரிக்க அதிபர் டிரம்ப் என்பதை 25 முறை சொல்லி இருக்கிறார். ராஜராஜ சோழன் ஆரம்பித்த போரை, பக்கத்து நாட்டு மன்னன் முடித்து வைத்ததாக சொல்லி இருந்தால் முதலில் அவன் கதையை முடித்திருப்பான் சோழன்.
ராமன் எப்படி இலங்கையின் மீது படை எடுத்து ராவணனை கொன்றானோ அதே போல இந்த படையெடுப்பை பிரதமர் நடத்திருக்கிறார் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். அதே போல், சிசுபாலனுடைய தலையை வெட்டுவதற்கு சுதர்சன சக்கரத்தை கிருஷ்ணன் பயன்படுத்தியது போல பிரதமர் பயன்படுத்தினார் என்று இன்னொரு அமைச்சர் சொல்கிறார். உங்கள் தோல்விகளை மறைக்க கடவுள்களை இவ்வளவு மலினமாக பயன்படுத்துவது நியாயமா?. ஆத்தியவாதிகளின் மனம் புண்படாதா?. இந்துக்களின் மனம் புண்படாதா?. பாதுகாப்புத்துறை அமைச்சர் தன்னுடைய பேச்சில் ஒரு முறை கூட மறந்தும் கூட கர்னல் சோபியா குரேஷிக்கு ஏற்பட்ட அவமானத்தை, அவமதிப்பை மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா பேசியதை கண்டித்து ஒரு வார்த்தை பேசவில்லை. அதே போல் பஹல்காம் தாக்குதலின் போது சுற்றுலா பயணிகளை காப்பாற்ற தன்னுடைய உயிரை கொடுத்த குதிரை ஓட்டி அதிஷா என்ற இஸ்லாமியரின் வீரத்தை பாராட்டி நீங்கள் ஒரு வார்த்தை பேசவில்லை. ஒரு அதிஷா மட்டுமல்ல, பயங்கரவாதத்துக்கு எதிராக நூற்றுக்கணக்கான அதிஷாக்கள் ஆயிரக்கணக்கான அதிஷாக்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது காஷ்மீர் மக்கள். அந்த காஷ்மீர் மக்களின் ஒருமைப்பாட்டை அங்கீகரித்து ஒரு வார்த்தை நீங்கள் பேசவில்லை. மத ரீதியான வேறுபாடுகளை பயங்கரவாதத்தை வைத்து அதிகரிக்க முடியாது என்பது தான் இந்தியா சொல்கிற செய்தி. அது தான் இந்தியா. அந்த இந்தியாவை நீங்கள் ஒருபோதும் பிளக்கவோ, வெறுக்கவோ முடியாது. நாங்கள் வெல்வோம்” என்று ஆவேசமாகப் பேசினார்.