நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பேச அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இந்தத் தீர்மானத்தில் சுமார் 118 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர். இதனையடுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் முகமது ஜாவேத், கொடிக்குன்னில் சுரேஷ் மற்றும் மல்லு ரவி ஆகியோர் இந்தத் தீர்மான நோட்டீஸை வழங்கினர்.
இந்நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள பதவி நீக்க தீர்மானம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின் முதல் நாளான இன்று (09.03.2026) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று மதியம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தங்களது எம்.பி.க்களுக்கு அவையில் ஆஜராகுமாறு அக்கட்சியின் கொறடாக்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி. சு. வெங்கடேசன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சபாநாயகர் பாரபட்சமற்ற மனநிலையை இழந்துவிட்டார். ஆளுங்கட்சியின் ஊதுகுழலாகச் செயல்படுகிறார். நாடாளுமன்ற மரபுகளை மீறிவிட்டார். தார்மீக அடிப்படையில் சபாநாயகர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர். எனவே அவர் மீது இன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. எங்களின் குரல் ஒடுக்கப்பட்டதற்காக அல்ல. ஜனநாயகத்தின் குரல் ஒடுக்கப்பட கூடாது என்பதற்காக” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/09/rahul-lok-speak-2026-03-09-10-21-50.jpg)
அதோடு கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி அளித்த தீர்ன்மண நோட்டிஸையும் பகிர்ந்துள்ளார். அதில், “இந்திய அரசியலமைப்பின் 94 (சி) பிரிவின் விதிகளின்படி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தின் அறிவிப்பை இதன் மூலம் வழங்குகிறோம். அவர் மக்களவையின் நடவடிக்கைகளை முற்றிலும் ஒருதலைப்பட்சமாக நடத்தி வருவதே இதற்குக் காரணமாகும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமையான பேசுவதற்கான வாய்ப்பு, பல சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
பிப்ரவரி 2ஆம் தேதி (02.02.2026) அன்று, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது உரையை முழுமையாக முடிக்க அனுமதிக்கப்படவில்லை. இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பொதுவாகவே பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. பிப்ரவரி 3ஆம் தேதி (03.02.2026) எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக, பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தியதற்காகவே தண்டிக்கப்படுகிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/09/om-birla-1-2026-03-09-10-22-10.jpg)
பிப்ரவரி 4ஆம் தேதி (04.02.2026), பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், இரண்டு முன்னாள் பிரதமர்கள் மீது முற்றிலும் ஆட்சேபனைக்குரிய மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்த அனுமதிக்கப்பட்டார். நிலைநாட்டப்பட்ட மரபுகள் மற்றும் கண்ணியமான விதிமுறைகளை அவர் மீறியபோதும், ஒருமுறை கூட அவர் கண்டிக்கப்படவில்லை. வழக்கமாக இத்தகைய செயல்களில் ஈடுபடும் அந்த குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக எங்கள் கோரிக்கையையும் மீறி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us