ரிசர்வ் வங்கி கவர்னர் உடனடியாக தலையிட்டு இப்போதே தீர்வு வழங்கிட வேண்டும் என மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ‘தீபாவளி நேரத்தில் பணி நியமனத் தேர்வுகள், எது சிரமமோ அதுவே காரணமாக ரிசர்வ் வங்கி வினோத பதில்’ என்ற தலைப்பில்   எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரிசர்வ் வங்கியின் கிரேடு பி  [Grade B (DR)]அதிகாரிகள் தேர்வு அக்டோபர் 18, 19 தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி என்பதால் தேர்வர்கள் சென்னை வந்து போவது சிரமமாக இருக்கும். ஆகவே பொருத்தமான பிந்தைய தேதிகளுக்கு தேர்வுகளை மாற்ற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் 15.09.2025 அன்று கடிதம் எழுதி இருந்தேன். 

Advertisment

அதற்கு 30.09.2025 அன்று தேதியிட்ட கடிதம் மூலம் பதில் அளித்துள்ள ரிசர்வ் வங்கியின் அதிகாரி, தேர்வு தேதிகள் பல்வேறு காரணிகளை முன்னிட்டு முடிவு செய்திருப்பதால் தேர்வு தேதிகளை மாற்றுவது இயலாதது என தெரிவித்துள்ளார். அதில் ஒரு காரணியாக தேர்வு மையங்கள் குறிப்பிட்ட தேதிகளில் கிடைப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். தீபாவளி கோடிக்கணக்கான மக்களால் கொண்டாடப்படுகிற திருவிழா என்பதும், அதனை ஒட்டிய நாட்களில் சென்னைக்கு வந்து போவது எவ்வளவு இன்னல்களைத் தரும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரணியாகும். ஆனால் பல காரணிகளை ஆய்வு செய்ததாக கூறும் ரிசர்வ் வங்கியின் நிர்வாகம், இவ்வளவு முக்கியமான காரணி கணக்கில் கொள்ளப்படுவதற்கான கூருணர்வு ஏன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடம் இல்லை என்பதைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. 

Advertisment

தீபாவளி காலத்தில் தேர்வு மையங்கள் எல்லாம் எளிதாக கிடைக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. அதையே தேர்வு தேதி நிர்ணயம் செய்யப்படுவதற்கான காரணியாக கூறுவது வினோதமான வாதம். ஆகவே தேர்வர்கள் ஆழ்ந்த கவனத்துடனும், நிம்மதியான மன நிலையோடும் தேர்வுகளை எழுதுகிற வகையில் தேர்வு தேதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ளேன். எதிர்காலத்தில் எனது கருத்தை கவனத்தில் கொள்வதாக குறிப்பிடப்பட்டிருப்பதற்கு நன்றி. தீபாவளிகள் எதிர்காலத்தில் வரலாம். ஆனால் சிலருக்கு வயது போய்விடும். சிலருக்கு வாய்ப்புகள் போய்விடும். அதனை எதிர்காலம் ஈடு செய்ய இயலாது. ஆகவே ரிசர்வ் வங்கி கவர்னர் உடனடியாக தலையிட்டு இப்போதே தீர்வு வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.