ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் 5% மற்றும் 18% என்ற 2 அடுக்குகளாகக் நாளை (22.09.2025) முதல்  குறைக்கப்பட உள்ளன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (21.09.2025) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், “நாளை முதல் நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது. உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நவராத்திரியின் முதல் நாளிலிருந்தே, நாடு, வளர்ச்சியடைந்த இந்தியாவை (ஆத்மநிர்பர் பாரதத்தை) நோக்கி ஒரு முக்கியமான அடியை எடுத்து வைக்கிறது. நவராத்திரியின் முதல் நாளான நாளை, சூரிய உதயத்துடன் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வரும். நாடு முழுவதும் நாளை முதல், ஜி.எஸ்.டி. சேமிப்பு திருவிழா (ஜி.எஸ்.டி. பச்சத் உத்சவ்) தொடங்கும். 

Advertisment

இதனால் உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். எனவே உங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்க முடியும். ஜி.எஸ்.டி. சேமிப்பு திருவிழா சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் பயனளிக்கும்” எனப் பேசினார்.  இந்நிலையில் இது குறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நவராத்திரி துவக்க நாளில் ஜி.எஸ்.டி சலுகை அமலாகிறது என மகிழ்ச்சியை பகிர்ந்த பிரதமர் அவர்களே, 8 ஆண்டுகளாக ஜி. எஸ். டி வரி கொடுமையால் மக்களின் தூக்கத்தை கெடுத்து சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?. ஊடகங்களை எப்போதுமே சந்திக்க மறுக்கிற பிரதமர் தொலைக் காட்சியில் வழக்கம் போல ஒருவழி உரை.

‘ஜி.எஸ்.டி வரிக் குறைப்பால் பெண்கள் விவசாயிகள் நடுத்தர வர்க்கத்தினர் பயன் பெறுவார்கள்... ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சி அடையும்’ எனப் பிரதமர் நமக்குப் புரியாத இந்தியில். இருக்கட்டும் பிரதமரே. இத்தனை ஆண்டுகளாக யார் விவசாயிகளை, பெண்களை, நடுத்தர வர்க்கத்தை வறுத்து எடுத்தது? யார் குடும்பங்களின் மகிழ்ச்சியை குலைத்தது?. நவராத்திரி துவக்க நாளில் ஜி.எஸ்.டி சலுகை அமலாகிறதாம். 8 ஆண்டுகளாக நீங்களே வறுத்து நீங்களே குலைத்து தூக்கத்தை கெடுத்து எத்தனை இரவுகளை சிவராத்திரிக்கள் ஆக்கினீர்கள் . அதற்கெல்லாம் மக்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா? 

இப்பவும் வசூல் செய்கிற மொத்த ஜி.எஸ்.டி இல் நீங்கள் கொடுத்திருக்கிற சலுகை எத்தனை சதவீதம்?. இத்தனை ஆண்டுகள் மக்களிடம் ‘கொள்ளை’ அடித்து விட்டு இப்போது தரும் அற்ப சலுகைக்கு இவ்வளவு ஆரவாரமா?. இந்த சலுகை மக்களுக்கு போய்ச் சேருமா?. அதற்கு என்ன உத்தரவாதம்?. உங்க கார்ப்பரேட் நண்பர்கள் விடுவார்களா?. உங்கள் கைகளில் கார்ப்பரேட் வரி விதிப்பு அதிகாரம் உள்ளதே. கார்ப்பரேட் வரிகளை உயர்த்தி மாநில அரசுகளுக்கு இழப்பீடு தருவீர்களா?. மாநில அரசுகள் நிறைவேற்றி வரும் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதிபாதிப்பு வராமல் உறுதி செய்வீர்களா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். 

Advertisment