குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜக்தீப் தன்கர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி (21.07.2025) தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருந்தார். இதன் காரணமாகக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்துவதற்கான நடைமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இத்தகைய சூழலில் தான் வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி (09.09.2025) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குடியத் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனையடுத்து குடியரசு துணைத் தலைவரை நியமிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாரா அல்லது ஆளுங்கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாகவும், எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி சார்பாகவும் தனித்தனி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருந்தது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் (17.08.2025) அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மர்ம தேசத்து மனிதர்கள். ஏற்கனவே குடியரசு துணைத்தலைவராக இருந்தவர் திடீரென இராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை. அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரும் பா.ஜ.க.வை சேர்ந்தவர்தான். அக்கட்சியால்தான் அந்நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார். அவ்வளவு பெரிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டுப் போனவர் என்னவானார் என்று இதுவரை நாட்டுக்குத் தெரியவில்லை. இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை வரவேற்க டில்லி விமான நிலையத்திற்கு நான்கு ஒன்றிய அமைச்சர்கள் சென்றுள்ளனர்.
ராஜினாமா செய்த தன்கரை அனுப்பிவைக்கப் போனது எத்தனை ஒன்றிய அமைச்சர்கள்?. எங்கே அனுப்பிவைத்தீர்கள்?. அதே இடத்திற்கு புதியவரையும் அனுப்பிவைக்க மாட்டோம் என்று குறைந்தபட்சம் அவரிடமாவது சொன்னீர்களா?. பல லட்சம் வாக்காளர்களோடு சேர்த்து குடியரசு துணைத்தலைவரையும் கண்டறியும் பொறுப்பு எதிர்கட்சிக்கு மட்டுமே உரியதாகிறது. ஆளையே காணோம் என்ற பதட்டத்தில் நாடு இருக்க இதில் கூசாமல் ஆதரவு கேட்கிறது ஒரு கூட்டம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.