புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் படித்து பல்வேறு போட்டிகளில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் சாதித்த மாணவ, மாணவிகளுக்கும் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற பள்ளிக்கும் கௌரவித்து பாராட்டும் விழா அறந்தாங்கியில் ஒரு திருமண மண்டபத்தில் கோட்டாட்சியர் அபிநயா தலைமையில் கல்வி அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. பள்ளி மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் தொடங்கிய விழாவில் அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

Advertisment

விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பேசும் போது, “பல்வேறு போட்டிகளில் இந்த பள்ளி மாணவர்கள் சாதித்திருக்கிறார்கள். அவர்களை பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மேல்மங்களம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வெ. சதீஷ்குமார், மற்றும் இரட்டையர்களான ந. ஜசில் கான், ந. ஜசிம் கான் ஆகிய 3 பேரும் 1330 திருக்குறள்களையும் மனப்பாடமாக சொல்லி சாதித்து இருக்கிறார்கள். ஒரே பள்ளியில் ஒரே நேரத்தில் 3 மாணவர்கள் திருக்குறளில் சாதித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. மிகவும் கடினமான செயலை செய்திருக்கிறார்கள். 

Advertisment

அந்த மாணவர்களை மேடையில் ஏற்றி அமர வைக்க வேண்டும். மேலும், மாணவர்கள் இந்த சாதனையை செய்ய உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர் இங்கர்சால் எனது இருக்கையில் அமர வேண்டும் என்று சொன்னதும் தலைமை ஆசிரியர் மறுத்தார். ஆனால் தலைமை ஆசிரியர் அமர வேண்டும் என்று மீண்டும் சொன்னதும் அமைச்சர் இருக்கையில் தலைமை ஆசிரியர் இங்கர்சால் அமர வைக்கப்பட்டார். அமைச்சர் இருக்கையில் அமர்ந்த தலைமை ஆசிரியர் கண் கலங்கியபடியே அமர்ந்திருந்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், “இந்த திருக்குறள் சாதனையை பார்த்தால் முதலமைச்சர் பாராட்டுவார். 

pdu-hm-thirukural-1

உயிர் தியாகம் செய்து பாதுகாத்த மொழி தமிழ். பெண் கவிஞர்கள் அதிகமுள்ள மொழி தமிழில் மட்டுமே. ஒரு நிகழ்ச்சியில் முதல்வரை புகழ்ந்து பேசினார்கள். புகழ்ச்சியை தவிர்த்து நல்ல கருத்துகளை தாருங்கள் என்றார் முதலமைச்சர். கல்விக்காக அதிக நிதி கொடுத்து கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை உலகறியச் செய்தவர் முதலமைச்சர். தன் பள்ளியை மட்டுமல்ல பல பள்ளிகளை மாற்றிக் காட்டிய தலைசிறந்த ஆசிரியர் ஜோதிமணி நான் மறமடக்கி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த போதே நீங்கள் அமைச்சராவீர்கள் என்றார். 

Advertisment

குழந்தைகளை தீய பழக்கங்களில் இருந்து பாதுகாக்க விளையாட அனுமதிக்க வேண்டும். குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசக் கூடாது” என்றார். விழாவில் கோட்டாட்சியர் அபிநயா பேசும் போது, “ஒரு குழந்தையை நல்லவர்களாக உருவாக்குவது ஆசிரியர்களே. குழந்தைகள் பெற்றோர்களைவிட ஆசிரியர்களிடமே அதிக நேரம் இருக்கிறார்கள். என்னை உருவாக்கியதும் ஒரு ஆசிரியர் தான் என்பதை பெருமையாக சொல்வேன்” என்றார்.