அரசு பள்ளியில் வகுப்பறை இன்றி, மொட்டை மாடியிலும், பள்ளி வராண்டாவிலும் அமர்ந்து கல்வி கற்கும் மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூர் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,238 மாணவ மாணவிகள் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் 18 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. ஒவ்வொரு வகுப்பிலும் மூன்று பிரிவுகளும், தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியும் செயல்படும் நிலையில், போதிய வகுப்பறைகள் இல்லாததால், மைதானம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்கள் மாணவர்களை பள்ளியின் வாராண்டா, மொட்டை மாடி, நடைபாதை உள்ளிட்ட இடங்களில் அமர வைத்து பாடம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்த இடப் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்தப் பள்ளியில் 2,000 மாணவர்கள் பயின்ற நிலையில், இடப் பற்றாக்குறை காரணமாக தற்போது 1,238 மாணவர்கள் மட்டுமே பயின்று வருவதாக கூறப்படுகிறது. பெற்றோர்-ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சார்பில், புதிய கட்டிடங்கள் கட்டுவது, மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது, புதிய இடத்தில் வகுப்பறைகள் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும், இதுவரை எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பள்ளியில் இடப் பற்றாக்குறை குறித்து தொடர்ந்து புகார்களும் கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன. இதற்காக, மாற்று இடத்தில் வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இடம் தேர்வு செய்யும் பணிகள் மற்றும் தேவையான மாற்றங்களைச் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இதற்கு உரிய தீர்வு காணப்படும்," என்று தெரிவித்தார்.

Advertisment

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் பல, "நான் முதல்வன்", "புதுமைப் பெண்", "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" போன்ற திட்டங்களால் முன்மாதிரியாகத் திகழ்கின்றன. இந்தத் திட்டங்கள் மாணவர் சேர்க்கை, கல்வித் தரம் மற்றும் உயர்கல்விக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளன.

அதேசமயம், இடப் பற்றாக்குறை, கழிப்பறை, குடிநீர், இணைய வசதி, மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை போன்ற குறைபாடுகள் சில பள்ளிகளில் இருக்கத்தான் செய்கின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, தமிழக அரசு புதிய கட்டிடங்கள் கட்டுதல், ஆசிரியர் நியமனம் உள்ளிட்டவற்றிற்கு முன்னுரிமை அளித்து விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.