Students struggle sitting with books at a printing press demanding that houses not be demolished
சிதம்பரம் இந்திரா நகரில் வீடுகளை இடிக்க வந்த பொக்லின் இயந்திரத்தை முற்றுகையிட்டு மாணவ மாணவிகள் புத்தகத்துடன் அமர்ந்து படித்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம் ரயில் நிலையம் அருகே இந்திரா நகர் பகுதியில் உள்ள வாய்க்கால் ஓரமாக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் வசிக்கும் பகுதி நீர் நிலைபகுதி என நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் அதில் இருந்த 20 வீடுகள் காலி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் மீதியுள்ள வீடுகளை இடிக்க வந்தபோது தற்போது தேர்வு காலம் என்பதால் மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள், எனவே தேர்வு எழுத உள்ள மாணவர்கள் இருக்கும் வீடுகளை இடிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதன் பெயரில் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் வீடுகளை மட்டும் விட்டுவிட்டு மீதியுள்ள வீடுகளை இடித்தனர். பின்னர் அனைத்து வீடுகளிலும் மின் இணைப்பு துண்டித்தனர். இந்த நிலையில் தற்போது தேர்வு தொடங்கி 2 நாட்களே ஆன நிலையில் மீண்டும் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளையும் இடிக்க பொதுப்பணித்துறையினர் பொக்லின் இயந்திரத்துடன் இன்று (05-03-26) வந்தனர். இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மாணவ மாணவிகள் பள்ளிக்கு தேர்வு எழுத செல்லாமல் பொக்லின் இயந்திரத்தின் முன் பகுதியில் அமர்ந்து புத்தகத்தை வைத்து படித்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தேர்வு முடியும் வரை வீடுகளை அகற்ற கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா, நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் சிதம்பரத்திற்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வந்தனர். அவர்களிடம் வீடுகளை அகற்ற அவசாகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து அமைச்சர் உத்தரவின் பேரில் தேர்வு முடியும் வரை வீடுகளை அகற்ற கூடாது என்று மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Follow Us