சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் உள்ள கேண்டினில் பணிபுரிந்து வருபவர் நித்யா (வயது 22/ பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் கந்த 20 நாட்களுக்கு முன்பு இந்த கேன்டனில் பணிக்குச் சேர்ந்தார். இந்த நிலையில், அங்கு பணியில் இருக்கும் காவலாளியிடம் நித்யா, இரண்டு நாட்களுக்கு முன்பு கேன்டனில் மாஸ்டராக வேலைக்குச் சேர்ந்த குணசேகர் (வயது 56) தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த காவலாளி காவல்துறைக்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளார்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சைதாப்பேட்டை மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் குணசேகரைக் கைது செய்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், கேண்டின் உரிமையாளரான செல்வம் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகியோர் ஏற்கனவே நித்யாவை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே, புதியதாக வேலைக்குச் சேர்ந்த குணசேகரும் நித்யாவிடம் தகாத முறையில் நடந்துகொண்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சம்பவம் குறித்து பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், குற்றத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களையும் காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நித்யா தற்போது அரசு மருத்துவமனையில் மருத்துவரிடம் கவுன்சிலிங் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாதிக்கப் பட்ட பெண்ணிற்கு நியாயம் கேட்டு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow Us