விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவிலில் செயல்பட்டு வரும் வி.பி.எம்.எம் (VPMM) கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசிடம் முறையாக உரிய அனுமதி பெறாமல் மகளிர் கல்லூரியை இருபாலர் கல்லூரியாக மாற்றியதோடு, அதனைக் கல்விச் சான்றிதழ்களில் திருத்தாததைக் கண்டித்து, மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணன்கோவில் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ‘வி.பி.எம்.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி’ செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அரசிடம் தேவையான அனுமதி பெறப்பட்டதா என்ற தெளிவில்லாத நிலையில், இந்தக் கல்லூரி இருபாலர் கல்லூரியாக மாற்றப்படுவதாகக் கல்லூரி நிர்வாகம் அறிவித்து, அதன்பேரில் ஆண் மாணவர்களையும் சேர்த்துள்ளது. ஆனால், கல்லூரி இருபாலர் கல்லூரியாக மாற்றப்பட்ட பின்னரும், மதிப்பெண் சான்றிதழ்கள், தேர்வு அனுமதிச் சீட்டுகள், போனஃபைடு சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி ஆவணங்களிலும் “மகளிர் கல்லூரி” என்றே குறிப்பிடப்பட்டு வந்துள்ளது. இருபாலர் கல்லூரியாக மாற்றப்பட்ட காலத்தில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள், தற்போது இறுதி பருவத் தேர்வு எழுத உள்ள நிலையில், தேர்வு அனுமதி பெறச் சென்றபோது கூட, போனஃபைடு சான்றிதழில் “வி.பி.எம்.எம் மகளிர் கல்லூரி” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால், எதிர்கால வேலைவாய்ப்புகள், உயர்கல்வி, அரசுப் பணிகள் உள்ளிட்டவற்றில் சட்ட ரீதியான சிக்கல்கள் ஏற்படலாம் எனக் கூறி மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால், SFI (Student Federation of India) தலைமையில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம், நேரில் சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவர்களின் கோரிக்கைகளைக் கல்லூரி நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்குப் பிரச்சினை கொண்டு செல்லப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
Follow Us