பரங்கிப்பேட்டை கும்மத் பள்ளி என்ற இடத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் நான்கு வகுப்பறைகளுடன் 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வந்தனர்.

Advertisment

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2 வகுப்பறை கொண்ட கட்டிடம் பழுதடைந்ததால் இதனை இடித்து விட்டனர். அதன் பிறகு 2 வகுப்பறைகளில் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். இட நெருக்கடியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டனர். இதனால் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து தற்போது 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

Advertisment

Untitled-1

பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது குறித்து அரசு உரிய நடவடிக்கையும் எடுக்காததால் மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்துப் பெற்றோர்களுடன் பள்ளி முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த புவனகிரி வட்டாட்சியர் மற்றும் ஒன்றிய கல்வி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வார காலத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisment