சென்னை தரமணியில் சட்டப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் 5ஆம் ஆண்டு சட்டப்படிப்பைப் படித்து வரும் மாணவர் கரிகால் வளவன். இவர் நேற்று முன்தினம் (26.08.2025) தேநீர் அருந்தக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வேளச்சேரி காவல் நிலைய காவலர் சம்பத் என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காவலர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுமாறு மாணவரிடம் கூறியுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகக் கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் காவலர் சம்பத், மாணவர் கரிகால் வளவனை அடித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வேளச்சேரி காவல் நிலையத்தில் 70க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மாணவர்கள் வேளச்சேரி பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதன் கிண்டி, தரமணி, சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையர்கள் தொடர்ந்து மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் காவலர் சம்பத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளச்சேரி காவல் நிலையத்தைச் சட்டக் கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.