Students involved in struggle and tension again in Bangladesh
வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக வெடித்த போராட்டத்தின் காரணமாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், வங்கதேச நாட்டின் இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றார்.
இருப்பினும் ஆங்காங்கே கலவரம் நடந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இது வங்கதேசத்தையும் கடந்து பேசு பொருளாக மாறிய நிலையில் இந்தியா தனது கண்டனத்தையும் பதிவு செய்திருந்தது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் மீண்டும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ளது. மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என முகமது யூனுஸ் சில தினங்களுக்கு அறிவித்தார். அதன்படி, அதற்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சகம் செய்து வந்தது.
இந்த சூழ்நிலையில், இந்த திட்டம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என்றும் பள்ளிகளில் மத ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும் அந்த திட்டத்துக்கு அந்நாட்டின் இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதனை தொடர்ந்து, வங்கதேச பள்ளிகளில் இசை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்தும் முடிவை முகமது யூனுஸ் தலைமையிலான அரசு ரத்து செய்தது.
இந்த நிலையில், வங்கதேச அரசின் இந்த முடிவை கண்டித்து அந்நாட்டின் மாணவர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருபுறம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் ஷேக் ஹசீனா மீதான குற்றவியல் வழக்குகளை கண்டித்து அவாமி லீக் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளதால் அந்நாட்டில் பதற்றம் நிலவகிறது.
Follow Us