திருநெல்வேலி மாவட்டம் மேலடியூர் பகுதியில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதாவது இந்த கல்லூரி வளாகத்தில் 5 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், கேரள மாணவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இந்த கல்லூரியில் பயின்று வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்குக் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது . இதன் காரணமாக அந்த மாணவர் கல்லூரி நிர்வாகத்தால் அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த மாணவரும் கன்னியாகுமரியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் எலிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து திருநெல்வேலி மாவட்ட சுகாதாரத் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் கல்லூரிக்கு நேரடியாகச் சென்ற சுகாதாரத் துறையினர் அங்குத் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்ட தொட்டியில் உள்ள வெள்ளநீர் கால்வாயிலிருந்து நேரடியாகத் தண்ணீரைக் கல்லூரி நிர்வாகமானது சட்டவிரோதமாக எடுத்துச் சுத்திகரிப்பு எதுவும் செய்யாமல் நேரடியாகப் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.
அதன் காரணமாக மாணவர்களுக்கு எலிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதற்கான காரணம் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து மற்ற மாணவர்களுக்குப் பரிசோதனை செய்ததில் மேலும் 7 மாணவர்கள் என மொத்தமாக 8 மாணவர்களுக்கு எலிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கான மருத்துவ ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதனையடுத்து சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே சமயம் கல்லூரியில் பயன்படுத்தப்பட்டு வந்த தண்ணீர் முழுவதுமாக மாசுபட்டுள்ளது ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து மறு உத்தரவு வரும் வரை கல்லூரியை மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது முழுமையாகத் தண்ணீர் பரிசோதனை செய்து குடிநீரின் தரம் சரியாக உள்ளது என்பதை அறிந்த பின்னரே கல்லூரியைத் திறப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்படும் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு புறம் கல்லூரியில் உள்ள உணவகம் மற்றும் உணவு சமைக்கக்கூடிய கூடம் ஆகிய இரண்டையும் தற்காலிகமாக அங்கீகாரத்தை ரத்து செய்து உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.