திருநெல்வேலி மாவட்டம் சேரன் மகாதேவி பகுதியில் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 3ஆம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கடந்த 3ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து கேரளாவிற்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதாவது ஆண் பேராசிரியர் ஒருவர், 2 பெண் பேராசிரியர்கள், 16 மாணவிகள் மற்றும் 29 மாணவர்கள் எனப் பலரும் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன்படி இந்த கல்விச் சுற்றுலா சென்ற இடத்தில் பேராசிரியர் மாணவர்களிடம் தவறாகப் பேசி நடக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு மாணவர்கள் அப்போதே பெண் பேராசிரியர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை அமைப்பான விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு அதற்கான விசாரணையும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் 5 மாணவர்கள், ஜான் சாமுவேல்ராஜ் என்ற மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடம் எடுக்கக்கூடிய பேராசிரியரைக் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பேராசிரியர் மீது தாக்குதல் நடத்தியதாக 5 மாணவர்கள் மீது பி.என்.எஸ். விதி 191/2, 329/4, 296 பி மற்றும் 118/1 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு புறம் மாணவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாகா கமிட்டியின் விசாரணை நடைபெற்று வரக்கூடிய நிலையில் பேராசிரியர் மீது தாக்குதல் நடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டது சம்பவம் சக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் புகாருக்குள்ளான பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்களிடையே எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.