கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்துள்ள திருமலையம்பாளையம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் செயல்பட்டு வரும் விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (01.11.2025) இரவு விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு வழக்கம் போல் உணவு வழங்கப்பட்டது. இந்த உணவில் பூச்சிகள் இருந்ததாகவும், அதனால் 5க்கும் மேற்பட்டோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களை அருகில் உள்ள மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பிறகு மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் அருந்திய உணவில் 5 பேருக்கு மட்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்ற கோணத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. மற்றொருபுறம் இந்த சம்பவத்தைக் கண்டித்து சக மாணவர்கள் நேற்று விடுதி முன்பு சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்குப் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமுக தீர்வு எட்டப்பட்டதால் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் காக்காசாவடி போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது எப்படி?. உண்மையாக உணவில் ஏதாவது பூச்சிகள் மற்றும் புழுக்கள் போன்றவை இருந்ததா?, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வேறு ஏதாவது உடல்நல பிரச்சனைகள் இருந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட உணவில் பூச்சிகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட 128 மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us