நெல்லையில் ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நள்ளிரவு நேரத்தில் பள்ளி வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகேயுள்ள மானாபரநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த விவசாயி சங்கர குமாரின் மகன் சபரிகண்ணன் (15). வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளியில் மாணவன் சபரி கண்ணன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் ஆசிரியர்கள் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவன் சபரி கண்ணன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி நேற்றிரவு உயிரிழந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நெல்லை -அம்பை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அதேநேரம் நேற்று நள்ளிரவில் மாணவரின் உறவினர்களில் சிலர் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்குள் புகுந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பேருந்துகளை தீ வைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது. இதில் 2 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த தொடர் நிகழ்வுகளால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.