சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் அதிக மின்னல் மற்றும் இடி சத்தத்துடன் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட சிவசக்தி நகரில் 3-வது குறுக்கு சாலையில் உள்ள ஜான்பாஷா என்பவர் வீட்டின் 2-வது தளத்தில் வாடகைக்கு குடியிருக்கும் நதியா (35), அவரது மகன் அகிலன் (16) சிதம்பரத்தில் உள்ள ராமகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். (17) அவரது மகள் காயத்ரி எம்.ஆர்.கே. நர்சிங் கல்லூரியில் முதல் ஆண்டு பயிற்றுவது வருகிறார். இவர்கள் 3 பேரும் வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது இடி சத்தத்துடன் மின்னல் இவர்களது வீட்டின் மேல் தளத்தில் இருந்த டிவி ஆன்டெனா மற்றும் இணை இணைப்பு டிஷ் ஆகியவற்றின் மீது விழுந்து அதன் அருகில் இருந்த மின்விளக்கு வயர் மூலம் வீட்டினுள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் சுவர்கள் மற்றும் மேல் தளத்தில் இருந்த சிமெண்ட் கூரைகள் பெயர்ந்து விழுந்ததால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அகிலன் தலையில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. இவரை உடனடியாக கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இடி மின்னல் தாக்கியதால் வீடு முழுவதும் இருந்த மின் வயர்கள், ஸ்விட்ச் பாக்ஸ் உள்ளிட்டவை எரிந்துள்ளது. அதேபோல் பேன், மின்மோட்டார், டிவி, வாஷிங் மெஷின், ஏசி உள்ளிட்ட அனைத்து மின் சாதனங்களும் பழுதாகி உள்ளது. அதேபோல் இதன் அருகில் இருந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் மோட்டார், டிவி, ஏசி, மின் மீட்டர் உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதாகி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து அகிலனின் அக்கா காயத்ரி கூறுகையில், "அதிகாலை 5.30 மணி அளவில் வீட்டில் நெருப்பு பிழம்பு மேலிருந்து சுவர் வழியாக இறங்குவது போல் ஒளி காணப்பட்டது. அப்போது படுத்திருந்த நாங்கள் திடீரென 5 அடி உயரம் மேலே சென்று கீழே விழுந்தோம். அப்போது தம்பிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். எங்கள் வீட்டின் மீது இருந்த டிவி ஆன்டெனா மற்றும் இன்டர்நெட் ஆன்டெனா மூலமாக மின்னல் தாக்கி வீடு முழுவதும் சேதம் அடைந்துள்ளது. வீட்டில் சுவர் 2 நிமிடம் நெருப்பு கலரில் காணப்பட்டது. சுவரில் கை வைத்தால் ஷாக் அடித்தது. அதனால் உயிர் பயத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தோம். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து கூச்சலிட்டதால் ஆக்கம்-பக்கத்தினர் ஓடி வந்தனர். இந்த சத்தம் எங்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்தியது" என்றார். இந்த சம்பவத்தால் அதிகாலையில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வருவாய்த் துறையினர் மற்றும் மின் துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர்.