திருநெல்வேலியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா இன்று (13.08.2025) நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி. பங்கேற்று சுமார் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப் பட்டம் வழங்கினார். அதோடு 650 பேருக்கு முனைவர் வழங்கினார்.
இந்நிலையில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஜூன் ஜோசப் என்ற மாணவி மைக்ரோ பைனான்ஸ் பிரிவில் ஆராய்ச்சி படிப்பை முடித்து ஆளுநரிடம் இருந்து முனைவர் பட்டம் பெறுவதற்காக மேடைக்கு வந்தார். அப்போது அந்த மாணவி திடீரென தனக்குக் கொடுக்கப்பட்ட பட்டத்தை ஆளுநரிடம் கொடுக்காமல் அருகில் இருந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகரிடம் கொடுத்து பட்டத்தைப் பெற்றுக் கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்றார்.
இதனால் பட்டமளிப்பு விழாவில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. இது குறித்து மாணவியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “தமிழகத்திற்கு விரோதமாகச் செயல்படும் ஆளுநரிடம் இருந்து முனைவர் பட்டம் பெற எனக்கு விருப்பம் இல்லை. ஆகையால் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் பட்டத்தைப் பெற்றுக் கொண்டேன்” எனத் தெரிவித்தார்.