விஜய்யின் தவெக மாநாட்டிற்காக பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை (21-08-25) நடைபெற இருக்கிறது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், மதுரை மாநகர் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநாடு தொடர்பாக பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதே போல், தவெக கட்சியினர் தமிழகம் முழுவதும் மாநாடு தொடர்பாக பேனர் வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள இனாம் கரிசல்குளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் காளீஸ்வரன் (19) என்பவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று இரவு அந்த பகுதியில் வரவேற்பு பதாகையை வைத்து கொண்டிருந்தார். அப்போது, அந்த பதாகையை கட்டுவதற்கு இரும்பு கம்பியை காளீஸ்வரன் எடுத்து வந்தார்.

அப்போது அந்த இரும்பு கம்பி எதிர்பாராதவிதமாக மின்மாற்றியில் பட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி காளீஸ்வரன் தூக்கி வீசப்பட்டுள்ளார். உடனடியாக அவரது நண்பர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வன்னியம்பட்டி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.