சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சி.பி.எஸ்.இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த வகையில் இந்த பள்ளியில் மதுராபுரி வேங்கை பெட்டியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் அஸ்வந்த என்ற 7 வயது சிறுவன் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். சிறுவன் பள்ளியில் தினந்தோறும் வாகனத்திலேயே பள்ளிக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால், நேற்று சிறுவனை அழைத்துச் செல்ல வழக்கமாக வரும் பள்ளி வாகனம் வராததால், மாற்று ஏற்பாடாகப் பள்ளியின் சாரில் காரில் வந்து அவ்வந்தை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாலை பள்ளி பணியாளர்கள் பேசுவதாக அவ்வந்தின் பெற்றோருக்குத் தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில், உங்கள் மகனுக்கு பிக்ஸ் வந்திருக்கிறது. சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம்..” என்று கூறியுள்ளனர். இதனையடுத்து பதறியடித்து அவ்வந்தின் பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்கு சிறுவன் அஸ்வந்த் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் கசிந்தவாறு மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டபோது, பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிங்கம்புணரி போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பேசுபொருளாக மாறிய நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். காலை பள்ளிக்கு சிறுவனை அழைத்து வந்த காரில், மற்ற மாணவர்கள் அனைவரும் இறங்கிவிட்ட நிலையில் அஸ்வந்த் மட்டும் காரிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கார் ஓட்டுநர் ஜான் பீட்டர் கவனிக்காமல், காரை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மாலை மாணவர்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு காரை திறந்தபோதுதான் காருக்கும் சிறுவன் இருந்தது தெரியவந்தது. அதன் காரணமாகவே மாணவனுக்கு மூச்சிதிணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சிங்கம்புணரி போலீசார் பள்ளியின் தாளாளரின் கணவர் சங்கர நாராயணன், அவரது மகன் மகேஷ் குமார் மற்றும் கார் ஓட்டுநர் ஜான் பீட்டர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.