பிரபல மருத்துவக் கல்லூரியில் மாணவி மர்ம மரணம்; கோவையில் பரபரப்பு!

102

மருத்துவக்கல்லூரி மாணவி விடுதி கழிவறையில் மானவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை, பீளமேடு பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில், நாமக்கலைச் சேர்ந்த 28 வயது பவபூரணி என்ற பெண் மருத்துவர், எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்துவிட்டு, மயக்கவியல் துறையில் முதுகலைப் படிப்பைப் பயின்று வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் தங்கி கல்வி கற்று வந்தார். இந்நிலையில், பவபூரணி விடுதி வளாகத்தில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், சந்தேகமடைந்த சக மாணவிகள் கழிவறைக் கதவைத் தட்டினர். பலமுறை கதவைத் தட்டியும் பவபூரணி கதவைத் திறக்காததால், மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், கல்லூரி நிர்வாகத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று  பார்த்தபோது, பவபூரணி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு காவல்துறையினர், பவபூரணியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் கூறுகையில், “பவபூரணி எவ்வாறு உயிரிழந்தார் என்பது தெரியவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தாரா என்பது தெளிவாகவில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரும். தற்போது மர்ம மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றனர்.

இதற்கிடையே, பவபூரணியின் தந்தை கந்தசாமி, “எனது மகளின் மரணம் குறித்து கல்லூரி நிர்வாகம் அளித்த விளக்கத்தை ஏற்கவோ, நம்பவோ முடியவில்லை. எனது மகளின் அறையில் இருந்த பொருட்கள், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, உடனிருந்த பணியாளர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் உரிய விசாரணை நடத்தி, எனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வழிவகுக்க வேண்டும்,” என்று கூறி, பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Coimbatore medical college students young girl
இதையும் படியுங்கள்
Subscribe